தடுப்பு மருந்தின் பயன் பற்றி வெளியிடப்பட்டிருக்கும் அமெரிக்க ஆராய்ச்சி.
சுமார் 1.2 மில்லியன் அமெரிக்கர்களிடையே கொவிட் 19 தடுப்பு மருந்து எடுப்பதன் பயன் பற்றி அறிந்துகொள்ள நடத்தப்பட்ட ஆராய்வு ஒன்றின் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொண்டிருப்பவர்களிடையே நடாத்தப்பட்ட அந்த ஆராய்ச்சி முடிவுகள் அம்மருந்துகள் கொவிட் 19 தொற்றினால் ஏற்படக்கூடிய கடும் விளைவுகள், இறப்பு ஆகியற்றுக்கு எதிராகப் பாதுகாப்புக் கொடுப்பதை உறுதிசெய்திருக்கின்றன.
ஆராய்வுக்காக பயன்படுத்தப்பட்டவர்கள் எல்லோரும் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டவர்களாகும். அவர்களில், வெவ்வேறு கடுமையான வியாதிகளை ஏற்கனவே கொண்டிருந்தவர்கள், இறந்தவர்கள், கடுமையாக கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தார்கள்.
தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட பின்னரும் இறந்தவர்களில் 77.8 விகிதமானோர் வெவ்வேறான நான்கு பலவீனமான குழுக்களைச் சேர்ந்தவர்கள்.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏதாவது ஒரு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடலில் கிருமி எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், நுரையீரல், சர்க்கரை வியாதி, சிறுநீரக வியாதி, இருதய வியாதியுள்ளவர்கள் என்பவை அந்த நான்கு பலவீனமான குழுவினரையும் அந்த ஆராய்ச்சி அடையாளம் காட்டியிருக்கிறது.
தமது கொவிட் 19 தடுப்பூசியை டிசம்பர் 2020 . ஒக்டோபர் 2021 இடைவெளிக்குள் பெற்ற 18 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் 1 228 664 பேர் குறிப்பிட்ட ஆராய்ச்சியில் பங்குபற்றினார்கள். பங்குபற்றியவர்களில் 0.18 விகிதத்தினர் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகினார்கள். அவர்களில் 0.015 விகிதத்தினர் கடும் நோய்வாய்ப்பட்டார்கள், இறந்தவர்கள் 0.0033 விகிதத்தினராகும்.
அமெரிக்காவின் தொற்றுநோய்ப் பரவல் தடுப்புத் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட ஆராய்ச்சியானது கொவிட் 19 தடுப்பு மருந்தே அந்த வியாதியை எதிர்க்கப் பயன்படும் முக்கிய கருவி என்று சுட்டிக் காட்டியிருக்கிறது. பலவீனமானவர்களுக்கு மேலுமொரு தடுப்பூசி கொடுக்கவேண்டும் என்றும் அவர்கள் நோய்ப்பரவலுக்குள்ளாகாமல் தம்மைப் பாதுகாக்கும் செயல்களில் ஈடுபடவேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சி மேலும் குறிப்பிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்