தென்னாபிரிக்கப் பாராளுமன்றத்தில் தீவிபத்து உண்டாக்கியவர் மீது தீவிரவாதச் செயலுக்காக வழக்கு.

49 வயதான ஸண்டீல் கிரிஸ்துமஸ் மாபே என்பவர் தென்னாபிரிக்காவின் பாராளுமன்றம் எரிந்துகொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டடார். அவர் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக செவ்வாயன்று இரண்டாம் தடவையாக நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டார். ஆரம்பத்தில் பாராளுமன்றக் கட்டடத்தினுள் அனுமதியின்றிப் பிரவேசித்தது, களவு போன்றவைக்காக அவர் குற்றஞ்சாட்டப்பட்டார். 

செவ்வாயன்று மாபே மீது ஜனநாயக அமைப்புக்கெதிரான செயல்களுக்காக தீவிரவாதச் செயலில் ஈடுபட்டதாகவும் வழக்குப் போடப்பட்டிருக்கிறது. மாபேயின் வழக்கறிஞர் அவர் ஒரு மனநோயாளி, இரட்டை அடையாளம் கொண்டவரென்று மருத்துவரால் குறிப்பிடபட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

மாபே வேறு நகரிலிருந்து அந்த நகருக்குக் குடிபெயர்ந்தவர், வேலையில்லாதவர், வீதியோரங்களில் படுத்துறங்கியிருக்கிறார். அவரைத் தெரிந்தவர்கள் எல்லோரும் அவர் சம்பந்தமில்லாத காரியங்களைச் செய்யும் ஒருவர் என்று குறிப்பிடுகிறார்கள். அவரை மனநோயுள்ளவர் என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள். அவர் மீது வழக்குப் பதிவு செய்ததை எதிர்த்து நீதிமன்றத்துக்கு வெளியே பலர் ஒன்றுகூடி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

மாபே கைது செய்யப்பட்டதிலிருந்தே அவர் உண்மையிலேயே தீவைத்த குற்றவாளியா என்ற கேள்வி தென்னாபிரிக்காவெங்கும் எழுந்திருப்பதாக செய்தி நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்