அமெரிக்கச் சட்டங்களுக்கு வெளியே இயங்கும் குவாந்தனாமோ சிறைமுகாம் திறக்கப்பட்டு 20 வருடமாகிறது.

குவாந்தனாமோ வளைகுடாவிலிருக்கும் அமெரிக்கச் சிறைக்கு முதலாவது குழுக் கைதிகள் வந்த நாள் ஜனவரி 11 2002 ஆகும். “மோசமானவர்களிலும் அதி மோசமானவர்கள்,” என்று அன்றைய உப ஜனாதிபதி டிக் சேனியால் வர்ணிக்கப்பட்டவர்களில் முதலாவது 20 பேர் அத்திகதியில் Camp X-Ray, என்றழைக்கப்படும் குவாந்தனாமோவில் அடைக்கப்பட்டார்கள். 

கூடாரங்களால் ஆன அந்த முகாம் உயரமான கம்பி வேலி எல்லைகளைக் கொண்டது. எப்போதும் துப்பாக்கியணிந்த காவலர்களின் கடும் பாதுகாப்புக்கு உட்பட்டது குவாந்தனாமோ சிறைமுகாம். அமெரிக்கச் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அச்சிறையில் ஆகக்கூடியது 800 பேர் வரை அடைக்கப்பட்டுச் சித்திரவதையுடனான விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.  

“செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பதிலடியாக அமெரிக்கா கட்டவிழ்த்துவிட்ட அநீதி, சட்டமீறல், சித்திரவதை ஆகியவற்றின் அடையாளமாகத் தொடர்ந்தும் காணக்கூடியதாக இருப்பது குவாந்தனாமோச் சிறை முகாம்,” என்று அதன் 20 வருட நிறைவையொட்டி ஹியூமன் ரைட் வாட்ச் குறிப்பிட்டிருக்கிறது.

செப்டெம்பர் 11 தாக்குதல் நடந்து நான்கு மாதங்களின் பின்னர் குவாந்தனாமோ சிறையின் முதல் குழுவினர் அங்கே கொண்டுவரப்பட்டனர். அச்சமயத்தில் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்க ஆரம்பித்து மூன்று மாதங்களாகியிருந்தது. 

அன்றைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஜூனியர், உப ஜனாதிபதி டிக் சேனி, பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரூம்பெல்ட் ஆகியோர் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் சாதாரணப் போர்த்தர்மங்கள் அவசியமில்லை என்று கருதினார்கள். அதற்காக அமெரிக்காவின் போர்க் கைதிகள் அவர்களுக்கான கையாளல்கள் ஆகியவற்றுக்கு உட்படாமல் இருக்கும் வகையில் குவாந்தனாமோ கைதிகளுக்கான கையாளல்கள் நீதியமைச்சால் வரையப்பட்டன. விசாரணையின்றி, குற்றச்சாட்டே இன்றி எத்தனை காலமும் தடுப்புக் காவலில் அவர்களை வைத்திருக்கவும், சித்திரவதைகள் செய்ய அனுமதிக்கும் வகையிலும் வழிசெய்யப்பட்டது. “enemy combatants” [எதிரியின் போர்வீரர்கள்] என்ற சொற்பதத்தால் அவர்கள் குறிப்பிடப்பட்டார்கள்.

குவாந்தனாமோவில் சிறைவைக்கப்பட்ட 800 பேரில் பெரும்பான்மையானோர் எவ்விதக் குற்றங்களும் சாட்டப்படாமல், தண்டனைக்குள்ளாகாமல் தத்தம் நாடுகளுக்கோ அல்லது மூன்றாவது நாடுகளுக்கோ, வெளிநாடுகளிலிருக்கும் அமெரிக்காவின் இரகசியச் சிறைகளுக்கோ அனுப்பப்பட்டார்கள். மிச்சப் பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். மொத்தமாக பனிரெண்டே பேர் மீது குற்றப்பத்திரிகைகள் உண்டாக்கப்பட்டு வழக்குகள் நடாத்தப்பட்டன. அவர்களில் இருவர் மட்டுமே சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஒன்பது பேர் அச்சிறையிலேயே இறந்தார்கள். இருவர் தற்கொலை செய்துகொண்டார்கள். 

சர்வதேசத்துக்கும் அச்சிறைமுகாமில் நடப்பவை படங்கள், வாக்குமூலங்கள் மூலம் வெளியாகி அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றி சந்தி சிரிக்கவைத்தது. அதனால், நாட்டின் நீதித்துறை அங்கே நடந்தவை, நடப்பவை, அதற்கான அனுமதிகள் பற்றிய விசாரணைகள் நடாத்தியதில் புஷ் அரசின் உயர்மட்டத்திலிருந்து அந்த அநியாயங்களுக்கான பச்சைக்கொடி காட்டப்பட்டிருப்பது தெளிவாகத் தெரியவந்தது.

அதையடுத்து வந்த ஒவ்வொரு ஜனாதிபதிகளும் தமது தேர்தல் வாக்குறுதியாக “குவாந்தனாமோ முகாம் மூடப்படும்,” என்ற குறிப்பிட்டும் அது இதுவரை மூடப்படவில்லை. அங்கே தொடர்ந்தும் 39 பேர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 15 பேரை வேறு நாடுகளுக்கு மாற்றி விடுவிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 14 சிறைக்கைதிகளை எங்கே அனுப்புவது என்பது பற்றிய பேச்சுவார்த்தைகள் வேறு நாடுகளுடன் நடந்துவருகின்றன. சோமாலியா, சிரியா, லிபியா, யேமன் நாட்டவராக இருப்பினும் அவர்களை அந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்புவதில்லை என்று அமெரிக்கா முடிவெடுத்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்