எமிரேட்ஸுக்குப் பாதுகாப்பு, உளவுத்துறை ஆகியவற்றில் உதவ இஸ்ராயேல் முன்வந்திருக்கிறது.
ஒரு பக்கம் சவூதி அரேபியாவும், ஈரானும் தங்களுக்கிடையேயான உறவைச் சுமுகமாக்கிக்கொள்ளும் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்கள். அதே சமயம் அவ்விரு நாடுகளின் அணிகளும் யேமனில் நடக்கும் போரைப் பின்னிருந்து இயக்கவும் செய்வது தொடர்கிறது. திங்களன்று சவூதி அரேபியாவின் அணியிலிருக்கும் அபுதாபி மீது யேமன் ஹூத்தி இயக்கத்தினரின் காற்றாடி விமானத் தாக்குதல் நடந்தது.
எமிரேட்ஸ் தலைநகரான அபுதாபி மீது ஹூத்தி போராளிகள் நடாத்திய தாக்குதலில் மூன்று பெற்றோலியம் கொள்கலன்கள் வெடித்தன, மூன்று பேர் இறந்தார்கள், மேலும் ஆறு பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஹூத்தி அமைப்பினர் அத்தாக்குதலுக்குப் பொறுப்பெடுத்ததை அடுத்து எமிரேட்ஸின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா பின் ஸாயத், “எங்கள் பிராந்தியத்தின் மீது நடாத்தப்படும் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் உரிமை எமக்கிருக்கிறது. இந்த நடவடிக்கையைத் தண்டித்தே தீருவோம்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமது நட்பு நாடாகியிருக்கும் எமிரேட்ஸின் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்த இஸ்ராயேல் பிரதமர் “எமது ஆதரவு எமிரேட்ஸுக்கு உண்டு, அரசர் முஹம்மது பின் ஸாயது எங்கள் நண்பர், தீவிரவாதத்தை நாம் ஆதரிக்கலாகாது,” என்று டுவீட்டியிருக்கிறார்.
அதையடுத்து எதிர்காலத்தில் அப்படியான தாக்குதல்கள் எமிரேட்ஸ் மீது நடக்காமலிருக்க உதவுவதற்காகத் தான் இஸ்ராயேலின் உளவு மற்றும் பாதுகாப்புத் துறையினரிடம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அப்படியான உதவிகளை வழங்குவதற்கான ஒழுங்குகளைச் செய்வது பற்றி எமிரேட்ஸ் அரசுக்குக் கடிதமெழுதியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்