வசீகரிக்கும் சக்தி உங்களிடத்தில்தான் இருக்கிறது|துலாம் ராசிக்காரர் பொதுப்பலன்கள்

சித்திரை 3, 4 ஆம் பாதங்கள் மற்றும் சுவாதி, விசாகம் 1, 2,3 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும், மற்றும் ஜென்ம ராசி எதுவென்று தெரியாத ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ர, ரி, ரு, ரே, ரோ, தா, தீ, தூ, தே… ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.

ராசியின் அதிபதி: சுக்கிரன். நட்சத்திர அதிபதிகள்: செவ்வாய், ராகு, குரு. யோகாதிபதி: சனி, புதன், சுக்கிரன். பாதகாதிபதி: சூரியன். மாரகாதிபதி: செவ்வாய்.


வாழ்க்கையின் உண்மையைப் புரிந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் துலாம் ராசி நண்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன்,கலைக்காரகன், களத்திரக்காரகன், எதிர்பாலினரால் ஈர்ப்பினை உண்டாக்கிடக் கூடியவன் என்பதால் நீங்கள் கவர்ச்சிகரமாக, எதிர்பாலினரை ஈர்த்திடக் கூடியவர்களாக, எல்லோராலும் நட்பு பாராட்டக் கூடியவர்களாக இருப்பீர்கள்.

பொதுவாக நீங்கள் பழக்கத்திற்கு மிகவும் இனியவராக இருப்பீர்கள். யார் எப்படியோ, எது எப்படியோ நாம் நினைத்தது நிறைவேற வேண்டும், நாம் எண்ணியதை நாம் அடைய வேண்டும் என்பதில் மட்டும் நீங்கள் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

அடுத்தவரை வசீகரீக்கும் சக்தி உங்களுக்கு இயல்பாகவே அமைந்துவிடும் என்பதால் உங்கள் மனதில் இருப்பதை வெளியில் உள்ளவர்கள் யாராலும் எப்போதும் கண்டுபிடிக்க முடியாது. உங்களுடைய முன்னேற்றத்தில் செயலில் மட்டுமே ஆழ்ந்த எண்ணம் கொண்டவராக எப்போதும் நீங்கள் இருப்பீர்கள். குடும்பத்திலும் தொழில் புரியும் இடத்திலும் உங்களுக்கென்று ஒரு கௌரவம் வேண்டும் என்று நினைத்து அதற்கேற்ப செயல்படக் கூடியவர்கள் நீங்கள். அதே நேரத்தில் ஒருமுறை ஒருவர் செய்த உதவியை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க மாட்டீர்கள்.

வெற்றியை எட்டும் வரை துவளாத மனதோடும் துடிப்போடும் செயலாற்றக் கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள். எல்லோரின் மனதிலும் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கேற்ப செயல்படும் ஆற்றலும் உங்களுக்கு உண்டு். உங்கள் அணுகுமுறை மற்றவர்கள் மனதைப் புண்படுத்தாத விதத்தில் அமையும். எல்லாவற்றையும் அனுசரித்து செல்லக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர் நீங்கள் என்பதால் உங்களுக்கென்று ஒரு தனிக்கூட்டம் இருக்கும். பஞ்சாயத்துகளில் கூட உங்கள் பேச்சைக் கேட்டு நடக்கவும் காத்திருப்பார்கள் பார்ப்பதற்கு பசு போன்று நீங்கள் காணப்பட்டாலும் உள்ளுக்குள் நீங்கள் ஆவேசக்காரர், அவசரக்காரர், நிதானிக்காமல் பல காரியங்களில் ஈடுபடக் கூடியவர். ஒரு கட்டத்திற்குப் பின் நீங்களே அதுபற்றி யோசிக்கவும் ஆரம்பிப்பீர்கள். முன்கோபமே உங்கள் முதல் எதிரியாக இருக்கும். அதை உணர்ந்த பிறகு ஆன்மிகத்தில் ஈடுபட்டு தெளிவடைவீர்கள். வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழத் தொடங்குவீர்கள்.

அள்ளிக கொடுப்பவரான சுக்ரன் உங்கள் ராசிநாதன் என்பதால் நீங்கள் அதிர்ஷ்டக்காரராகவே இருப்பீர்கள். நீங்கள் செல்வச் செழிப்புள்ளவராக மாற வேண்டுமென்றால் சுக்ரனுக்குரிய நட்சத்திரத்தில் அவருக்குரிய ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வரவேண்டும். அரசியல் ஈடுபாடும் உங்களுக்கு மிகச்சிறப்பாக இருக்கும் அதேபோல் அரசு தொடர்புடைய தொழிலில் நீங்கள் ஈடுபடுவீர்கள். காவல், ராணுவம், பத்திரிகைத்துறை, ஓட்டல் போன்ற தொழில்களில் நீங்கள் முத்திரைப் பதிப்பீர்கள்.
வாக்கு சாதுர்யமும் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் ஆற்றலும் பெற்ற உங்களுக்கு நாற்பது வயது வரை வாழ்க்கை மிகவும் போராட்டமாகத்தான் இருக்கும். கடன் வாங்குதல் அதற்கு வட்டி கட்டுதல் என்று உங்கள் வருமானம் சிதறும். கூட்டு வியாபாரத்தில் உங்களுக்கு நன்மை இருக்காது, அதையும் மீறி ஈடுபடும்போது கூட்டாளிகளிடம் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உங்கள் ராசிநாதன் களத்திரக்காரகன் என்பதால் வாழ்க்கைத் துணையை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது பொருத்தம் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லை என்றால் உங்கள் நோக்கம் அறிந்து அவர்கள் செயல்பட மாட்டார்கள். அல்சர், ஒவ்வாமை, வயிற்று உபாதை, சிறுநீரகக் கோளாறு, தலைவலி, தோல் சார்ந்த நோய்கள் என்று உங்களில் ஒரு சிலரை வாட்டும் நோய் வரும்போதே அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வதுடன் எச்சரிக்கையாகவும் நீங்கள் இருந்திட வேண்டும்.

துலாம் ராசியில் பிறந்த உங்களுக்கு ராஜ கிரகமான சூரியன் நட்பாகவோ உச்சமாகவோ ஆட்சியாகவோ இருக்கும் போது உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும். அதே நேரத்தில் உங்களுக்கு சூரியன் பகையாகி இருந்தால் அரசு வேலையைப் பற்றி நீங்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் ஒவ்வொருவரும் அவர்களுக்கேற்ற வகையில் தொழிலைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.

உறவினர்களிடம் நீங்கள் எப்போதும் பற்று உடையவர்களாகவே இருப்பீர்கள். சரியான நேரத்தில் நீங்கள் நம்பியவர்கள் உங்களைக் கைவிட்டாலும் அதற்காக அவர்களை சமயம் பார்த்து பழி தீர்த்துக் கொள்ள மாட்டீர்கள். வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் வசதிகள் அனைத்தையும் சேகரித்துக் கொள்வதில் உங்களுக்கு அதிகமாகவே ஆர்வம் இருக்கும்.

சிறு வயதில் நீங்கள் சிரமப்பட்டாலும் நடு வயதில் வறுமை நீங்கியவராகவும் வாழ்வின் இறுதியில் எல்லாம் பெற்ற திருப்தியுடையவராகவும் இருப்பீர்கள். இயற்கையில் ஆன்ம வலிமைக் குறைந்தவரான நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் வலியச் சென்று தலையிட்டுக் கொள்ள மாட்டீர்கள். உங்களில் பலருக்கு முன்னோர்கள் தேடி வைத்த சொத்துக்களை அடையமுடியாத நிலையும், தந்தையின் ஆதரவும் இருக்காது. மற்றவர்களுக்குப் புலனாகாத அற்புத விஷயங்களும் கண்ணிற்கும் கருத்திற்கும் எட்டாத நுண்ணிய விஷயங்களும் உங்களுக்கு எளிதில் தெளிவாகும். உங்களுக்குப் பின்னால் உங்களைப்பற்றி குறை கூறுபவர்கள் உங்களை நேரில் கண்டால் பயந்து பணிந்து மரியாதை செலுத்துவார்கள். உங்கள் ராசியின் சின்னம் தராசு என்பதால் குணப்பண்பும் அறிவு நுட்பமும் அதிகம் கொண்டவராக நீங்கள் இருப்பீர்கள்.

இவையெல்லாம் துலாம் ராசியில் பிறந்த உங்களுடைய பொதுப்பலன்களில் சிலவாகும்.

எந்த ராசியில் பிறந்தாலும், லக்கினம், கிரக அமைப்புகள், தசாபுத்தி, போன்றவற்றுக்கு ஏற்பவும், கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்பவும், அந்த கிரகங்கள் உங்களுடைய ஜாதகத்தில் அமர்ந்திருந்த நிலைக்கேற்பவும் உங்களுக்குப் பலன்கள் மாறுபடும்.