பெல்ஜிய அரச சேவை ஊழியர்களை உயரதிகாரிகள் விடுமுறை நேரத்தில் கூப்பிடலாகாது.
தொழிலாளிகளின் வேலை நேரத்தையும், ஓய்வு நேரத்தையும் தனிப்படுத்த வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்ட பெல்ஜிய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அரச சேவை உயரதிகாரிகள் தமக்குக் கீழே வேலை செய்பவர்களை அவர்களின் ஓய்வு நேரத்தில் உத்தியோகபூர்வமாகத் தொடர்பு கொள்ளலாகாது என்பதே அது. ஓய்வு நேரத்தில் தொடர்பிலிருக்க மறுப்பவர்களை அதிகாரிகள் எவ்விதத்திலும் தண்டிக்கவும் கூடாது.
சமீப வருடங்களில் பாவனைக்கு வந்திருக்கும் பல தொழில்நுட்பங்கள் ஒரு நபரை எந்தச் சமயத்திலும் தொடர்புகொள்ளும் வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறது. தானாகவே தனக்கு எவரும் தொடர்பு கொள்ளலாகாது என்று திடமாகத் தவிர்ப்பவர்களைத் தவிர மற்றவர்களைத் தொடர்பு கொள்வதற்கான வசதிகள் இருக்கின்றன. அத்துடன், கொரோனாப்பரவல் காலமும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியைப் பரவலாக அனுமதித்திருப்பதால் பல ஊழியர்களின் வேலை நேரமும், ஓய்வு நேரமும் ஒன்றுடனொன்று கலந்துவிட்டிருக்கிறது.
ஓய்விலிருந்தாலும் தாம் தமது வேலைத்தளங்களிலிருந்து தொடர்பு கொள்ளப்படலாம், எப்போதும் வேலை சம்பந்தமான விடயங்களில் ஈடுபடத் தயாராக இருக்கவேண்டும் போன்ற நிலைப்பாடுகள் பலரை மனரீதியாகத் தாக்கியிருக்கிறது. அதனால், மன உழைச்சல், அரோக்கியமின்மை போன்றவை பலரை வாட்டிவருகின்றன.
அதனாலேயே பெல்ஜியம் அரசு மேற்கண்ட நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அதேபோன்ற சட்டம் ஏற்கனவே பிரான்ஸ், அயர்லாந்து, போர்த்துக்கால் ஆகிய நாடுகளில் இருக்கின்றன. அரச சேவைகளிலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அச்சட்டங்கள் தனியார் துறைகளிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பெல்ஜிய அரசு குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்