ரஷ்யாவுக்குப் பதிலாக வேறெவ்விடம் எரிசக்தியை வாங்கலாமென்ற தேடலில் ஈடுபடும் ஐரோப்பா.

கடந்த சில வருடங்களில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் தாம் கொள்வனவு செய்யும் எரிசக்தியின் அளவைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டிருக்கின்றன. அப்படியிருந்தும், ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான எரிசக்தியில் மூன்றிலொரு பகுதி ரஷ்யாவிலிருந்தே வருகிறது. உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவுடன் மல்லுக்குத்தி வரும் ஐரோப்பிய நாடுகள் அவ்விடயத்தில் ரஷ்யாவுடன் சுமுகமான முடிவை எடுக்க முடியாமல் போகும் பட்சத்தில் எரிசக்தியை வேறெங்காவது வாங்கவேண்டிய நிலைமை உண்டாகும்.

அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தினசரி எச்சரித்துவரும் “ரஷ்யா மீதான கடுமையான கட்டுப்பாடுகள்,” என்பது நிஜமானால், குளிர்காலத்தின் தீவிரமான இச்சமயத்தில் ரஷ்யாவிடமிருந்து எரிசக்திக் கொள்வனவையும் நிறுத்திக்கொள்ளவேண்டிவரும். விளைவு ஐரோப்பாவில் ஏற்கனவே படுவேகமாக ஏறியிருக்கும் எரிசக்தியின் விலை மேலும் உயர்வதுடன், பற்றாக்குறையும் ஏற்படுவதைத் தடுக்க இயலாது. 

எரிசக்திக்கான தனது தேவையைப் பூர்த்திசெய்ய ஐரோப்பா நாடியிருக்கும் விலாசம் கத்தார் ஆகும். உலகின் மிகப்பெரிய திரவ எரிவாயு விற்பனையாளர்களில் முதன்மையான கத்தார் தற்போது தனது முழுப் பலத்துடன் அதை உறிஞ்சி வருகிறது. வெளியெடுப்பதை விற்பதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே ஆசிய நாடுகள் சிலவற்றுடன் செய்துகொண்டுள்ளது. எனவே, உடனடியாகவோ இலகுவாகவோ கத்தாரிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்யும் வாய்ப்பு இல்லை.

சாள்ஸ் ஜெ. போமன்