சிறீலங்காவின் பணவீக்க ஏற்றம் அளவு ஆசியாவிலேயே மிக அதிகமானது.

நாட்டில் நிலவும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள், விளைச்சல் குறைவு, அன்னியச் செலாவணித் தட்டுப்பாடு ஆகியவைகளால் சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கத்தின் அளவு ஆசியாவிலேயே மிக அதீதமானது என்று சர்வதேசப் பொருளாதார விற்பன்னர்கள் கணித்திருக்கிறார்கள். உலகளவிலான பொருட்களின் தட்டுப்பாடும், விலையுயர்வும் சிறீலங்காவின் உள்நாட்டுப் பொருளாதார, வர்த்தக நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கின்றன.

கொள்வனவுப் பொருட்களின் விலை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 14.2 % ஆல் அதிகரித்திருப்பதாக சிறீலங்காவின் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட விபரங்களின்படி ஆசியாவிலேயே பணவீக்கம் அதிகமாக இருந்த பாகிஸ்தானை சிறீலங்கா தாண்டியிருக்கிறது. அன்றாட உணவுப்பொருட்களின் விலைகள் 25 % ஆல் அதிகரித்திருக்கின்றன. அவை டிசம்பரில் 22.1 % ஆகும். டிசம்பரில் 7.5 % ஆல் விலையுயர்ந்திருந்த மற்றைய பொருட்களின் விலைகள் ஜனவரியில் 9.2 % ஆல் அதிகரித்திருக்கின்றன.

2022 இல் திருப்பவேண்டிய வெளி நாட்டுக் கடன்களில் 7 பில்லியன் டொலர் கட்டப்படாத நிலையில் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு 3.1 பில்லியன் டொலர் மட்டுமே. எனவே, சிறீலங்காவின் மத்திய வங்கி தனது கடன் கொடுக்கும் வட்டி விகிதத்தை அதிகரித்திருக்கிறது. 

விலையதிகரிப்பாலும், பணமதிப்பு வீழ்ச்சியாலும் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாட்டாலும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் மக்களின் எரிச்சலைத் தணிக்க ஜனாதிபதி கோட்டபாயாவின் அரசு சுமார் 1 பில்லியன் டொலர் பெறுமதியான உதவித் திட்டங்களைக் கடந்த மாதம் அறிவித்திருந்தது. அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, விவசாயிகளுக்கு நிவாரணமும், ஊட்டத் தொகையும் அவைகளில் சிலவாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்