இரண்டு சீனர்களுக்கு ஒரு கண்காணிக்கும் கமராவால் நிறைந்திருக்கிறது சீனா.
உலகிலிருக்கும் கண்காணிப்புக் கமராக்களில் பாதியளவைச் சீனா கொண்டிருக்கிறது. அதன் மூலம் உலகிலேயே அதிகமாகக் கண்காணிக்கப்படும் மக்கள் சீனர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. கொரோனாத்தொற்றுக்காலத்தில் படு துரிதமாக கண்காணிக்கும் கமராக்கள் நாட்டில் அதிகமாக்கப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை தற்போது 600 மில்லியன் என்று கணிக்கப்படுகிறது. அதன் மூலம் மக்கள் தொகையில் இருவருக்கு ஒருவர் என்ற அளவில் சீனாவில் கண்காணிக்கும் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
அவற்றைத் தவிர சீனப் பொலீசாரின் தலைக்கவசங்களிலும் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டு அவை ஒரு மையத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. சீனாவின் கண்காணிக்கும் கமராக்கள் முக அடையாளங்களை வைத்து ஆளை அடையாளங்காணக்கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் செயற்படுபவை. எனவே கண்காணிப்புக் கமராக்கள் ஒரு நபரைக் காணும்போது அவரைக் கண்காணிப்பு மையத்தில் இருப்பவர் பெயர், விலாச விபரங்களோடு தொடரலாம்.
சீனாவில் வட்சப், டுவிட்டர், பேஸ்புக் ஆகியவை நாட்டின் இணையப் பாதுகாப்பு மதில் மூலம் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. பெரும்பாலானோர் சீனாவின் வெய்பூ, வீசட் ஆகிய சமூகவலைத்தளங்களைப் பாவிக்கிறார்கள். தொலைத்தொடர்புகளுக்கு மட்டுமன்றி பல வகையான கொள்முதல்கள், பணப்பரிமாற்றம் ஆகியவைகளை அந்தச் செயலிகளே சீனர்களுக்காகச் செய்கின்றன.
வெய்பூ, வீசட் நிறுவனங்கள் தமது பாவனையாளர்களின் விபரங்கள், பாவிப்பு, செயற்பாடு ஆகியவற்றை அரசுக்குக் கொடுக்கவேண்டும் என்பது சட்டம். எனவே நிஜத்தில் சீனாவால் தனது மிகப் பெரும்பான்மையான குடிமக்களின் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கண்காணித்துத் தொடர முடியும்.
சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னரே சீனாவின் கொம்யூனிஸ்ட் கட்சி தன் அதிகாரபூர்வமான டுவிட்டர் கணக்கு மூலம் “எங்களின் 1.4 பில்லியன் குடிமக்களையும் ஒரே வினாடியில் எங்களால் அடையாளம் காண முடியும். 16 சீன நகரங்களிலும், மாவட்டங்களிலும் அவற்றைப் பாவிப்பது மூலம் நாம் நாட்டில் குற்றவாளிகளை அடையாளங் கண்டு தண்டிக்க முடியும், பாதுகாப்பைப் பேண முடியும்,” என்று பீற்றிக் கொண்டது.
சீனாவின் கண்காணிப்புச் செயற்பாட்டு அமைப்புக்கு “ஸ்கைநெட்” என்று பெயர்டப்பட்டிருக்கிறது. சீனா பீற்றிக்கொள்வது உண்மையோ இல்லையே சீனர்கள் தமது நவீனத் தொடர்புக் கருவிகள் மூலம் தம்மைக் கண்காணிக்க தாமே அரசுக்கு வழிசெய்துகொடுக்கிறார்கள். மக்களே அதை நம்பும்போது அது பொய்யாக இருப்பினும் வீதியெங்கும் பொலீசார் தேவையில்லை என்கிறார்கள் சீனாவின் நடவடிக்கையை எடைபோடும் ஆராய்ச்சியாளர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்