தனது பலத்தைத் தவறாகப் பாவித்த அலிபாபா நிறுவனம் மீது மிகப்பெரும் தண்டனை அறவிடப் போகிறது சீன அரசு.

சீனாவின் சந்தையில் பலமான நிறுவனங்கள் தமது பாரிய அதிகாரத்தைப் பாவித்து தம்முடன் சேர்ந்து செயற்படும் சிறு நிறுவனங்கள் தம்முடைய தயாரிப்புக்களை மட்டுமே விற்கவேண்டுமென்று கட்டாயப்படுத்துகின்றன. அப்படியாகத் தமது ஏகபோகத்தைப் பாவித்துச் சிறு நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது சந்தைப் பொருளாதாரத்துக்கு உகந்ததல்ல என்று குறிப்பிட்டு அப்படியான நிறுவனங்கள் மீது பெரிய தண்டத்தொகைகளைக் கட்டும்படி உத்தரவிட்டிருக்கிறது சீன அரசு.

https://vetrinadai.com/news/jack-ma-appears/

உலகின் மிகப்பெரும் இணையத்தள நிறுவனமான சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் மீது ஏகபோகத்தைப் பாவித்துச் சிறு நிறுவனங்களைக் கட்டுப்படுத்திய குற்றத்துக்காக விதிக்கப்பட்டுள்ள தண்டம் சுமார் 2.8 பில்லியன் டொலர்களாகும். இந்தத் தண்டத் தொகை 2019 ம் ஆண்டு அலிபாபா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 4 விகிதமாகும். இத்தொகையானது 2015 இல் இதே காரணத்துக்காக அமெரிக்காவின்Qualcomm Inc.  நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட தண்டத்தை விட மூன்று மடங்கானதாகும். 

அலிபாபா நிறுவனம் அது பாவித்துவரும் விற்பனை முறை, தொழில்நுட்ப முறை போன்றவைகள் மூலமாகவும் தன்னைவிடச் சிறிய நிறுவனங்களைக் குறிப்பிட்ட விதமாக நடக்கும்படி கட்டாயப்படுத்திவருவதையும் சீன அரசு கடுமையாகக் கண்டித்திருக்கிறது. 

அலிபாபா நிறுவனத்தின் உடைமையாளரான ஜக் மா தன்னிடமிருக்கும் நிறுவனங்களையெல்லாம் ஒன்றுபடுத்தி இயக்கும் முதலீட்டு வங்கியான Ant Group Co. மீதும் சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டது போன்ற கட்டுப்பாடுகளைப் போடுவதில் திடமாக இருக்கிறது. அந்த முதலீட்டு வங்கி மூலமும் ஜக் மா சிறிய நிறுவனங்களைத் தன்னிஷ்டப்படி இயக்குவதில் ஈடுபட்டிருக்கிறார் என்று குறிப்பிட்டு அந்தப் பாரிய நிறுவனத்தைச் சிறிய சிறிய நிறுவனங்களாக்கும்படி சீன அரசு பணித்திருக்கிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *