ஐரோப்பியக் குப்பைகள் துருக்கியின் சுற்றுப்புறச் சூழலைப் பெருமளவில் மாசுபடுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
மறுபடியும் பாவிக்க முடியாத பிளாஸ்டிக் குப்பைகள் துருக்கியினுள் களவாக இறக்குமதி செய்யப்பட்டு எரிக்கப்படுவதாக கிரீன்பீஸ் அமைப்பு தனது அறிக்கையொன்றில் குற்றஞ்சாட்டியிருக்கிறது. துருக்கியின் அடானா நகரிலிருக்கும் குப்பைகளைக் குவிக்கும் ஐந்து மையங்களிலிருக்கும் குப்பைகளிடையே எடுத்த ஆதாரங்களை வைத்தே அந்த அமைப்பு மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
2020 இல் ஐக்கிய ராச்சியத்தின் 40 % பிளாஸ்டிக் குப்பைகள் (209,642 தொன்கள்) துருக்கிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அவைகளில் பாதியளவு பிளாஸ்டிக்குடன் வேறு கலவைகள் கொண்டவையாதலால் மீண்டும் பாவிக்கமுடியாதவை. ஐரோப்பிய ஒன்றியம் 440,000 தொன் பிளாஸ்டிக் குப்பையை 2020 இல் துருக்கிக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. அது 2016 இல் அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதை விட 20 மடங்கு அதிகமானது. அதன் மூலம் துருக்கியே ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான பிளாஸ்டிக் குப்பைகளை வாங்கிக்கொள்ளும் நாடாகியிருக்கிறது.
அடானா நகரில் பல பொது இடங்களிலெல்லாம் அந்த நச்சுப் பிளாஸ்டிக் குப்பைகள் எரிந்தும், சிதறியும் இருப்பதாக கிரீன்பீஸ் குறிப்பிடுகிறது. அவை நகரின் நீர் நிலைகள், விவசாய நிலம் உட்பட மக்கள் பாவனையிலிருக்கும் பல இடங்களில் நச்சுத் தன்மையைப் பரப்புகிறது. அதன் விளைவாக பலரும் வெவ்வேறு வியாதிகளுக்கும் உள்ளாகிறார்கள். மீள்பாவிப்புக்கு உதவாத பிளாஸ்டிக்கை எரிப்பதால் ஏற்படும் நஞ்சு மண்ணிலும், குடி நீரிலும் சேர்ந்து விதம் விதமான புற்று நோய்களை உண்டாக்குகிறது.
துருக்கி சகலவிதமான பிளாஸ்டிக் குப்பைகளையும் இறக்குமதி செய்வதைக் கடந்த வருடம் நிறுத்தியது. ஆனால், நாட்டின் பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிப்பவர்கள் அரசை நிர்ப்பந்தித்ததால் அச்சட்டத்தை எட்டே நாட்களில் வாபஸ் வாங்கிக்கொண்டது.
சாள்ஸ் ஜெ. போமன்