வான்மழையாய்

பகைக்கண்டு போராடு! தமிழா உன்றன்
பகைவீழ்த்தப் போராடு!

எதிரி எல்லாம்
திகைக்கட்டும் உன்திறனை!

உலகம் தன்னில்
திடம்கொண்டோன் தமிழனென உணர்ந்து கொண்டு!


குகைவிட்டு வெளிவந்த வேங்கைப் போன்று
கொதித்தெழடா! அழித்தொழிடா! பகைமை தன்னை!


புகையல்ல நெருப்பென்றே உன்னைக் காட்டு!
புரட்சிக்கு வழிதன்னை நீயே தீட்டு!

எவருக்கும் எவருமிங்கே அடிமை இல்லை!
எல்லோரும் ஓர்நிறைதான் பேதம் இல்லை!
தவரென்றே தோன்றுவதை ஒதுக்கித் தள்ளு!
தகதகக்கும் எரிமலையாய் எழுந்தே நில்லு!
சுவரென்ற தடைகளையே உடைத்தெ றிந்து
சுதந்திரத்தை மக்களுக்கு நீயே காட்டு!
புவனத்தில் பிறந்தோர்க்கு உரிமை எல்லாம்
பொதுவென்று முழங்கியேதான் நிமிர்ந்தே நில்லு!

அடங்கிடாதே! அச்சத்தில் வீழ்ந்தி டாதே!
அதர்மத்தை ஏற்றிடாதே! கோழை யாக
முடங்கிடாதே! எதுவரினும் எதிர்த்தே நில்லு!
முடிவுகட்டும் சக்தியாகு! கொடுமை தன்னை
அடக்கியேதான் உன்திறனை உலகில் காட்டு!
அதிகாரம் ஒருவருக்கே உரிமை இல்லை!
கடல்போலே பொங்கியெழு! ஆதிக் கத்தின்
கருவறுக்கும் சமத்துவமாய் நீயே வாழு!

கர்வம்கொள்! காட்டாறு என்றே மாறு!
கழனியினைச் செழிப்பாக்கு! வளத்தை ஏற்று!
சர்வமும்நீ என்றேதான் வாழ்ந்தே காட்டு!
சரித்திரமாய் நீயாகு! ஓங்கி வாழு!
தர்மத்தின் வழியாகு! தலைமை காணு!
தறிகெட்டோர் செயல்களுக்கு தடையாய் மாறு!
வர்க்கமெனும் பேதத்தை அகற்று! மண்ணை
வளமாக்கும் வான்மழையாய் என்றும் வாழு!

எழுதுவது :பாவரசு பாரதிசுகுமாரன்