சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஐரோப்பாவின் இளைய நாடு, கொசோவோ.
அமெரிக்க அரசுடன் நெருக்கமான உறவைக் கொண்ட கொசோவோ பெப்ரவரி 17, 2008 இல் தான் சுதந்திர நாடாகத் தன்னைப் பிரகடனம் செய்துகொண்டது. முன்னாள் யூகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்த கொசோவோவை, செர்பியா தனது ஒரு மாகாணமாகவே கருதுவதால் அதைச் சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்காவை அடுத்து சுமார் 100 உலக நாடுகள் கொசோவோவை ஒரு தனி நாடு என்று ஏற்றுக்கொண்டன.
கிரீஸ், சைபிரஸ், ருமேனியா, ஸ்பெயின், ஸ்லோவாக்கியா ஆகிய ஐரோப்பிய நாடுகளும் கொசோவோவை இன்னும் சுதந்திர நாடாக அங்கீகரிக்கவில்லை. ஓர்த்தடொக்ஸ் கிறீஸ்தவ நாடான செர்பியாவுடன் சரித்திர ரீதியில் நெருக்கமான கொசோவோவின் பெரும்பாலானோர் முஸ்லீம்களாகும். அமெரிக்கா, நாட்டோ அமைப்பு ஆகியவையுடன் உதவியுடன் செர்பியாவுடன் போரிட்டே கொசோவோ தனது சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது.
சுதந்திரத்தின் விலையாகப் பல ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள், சுமார் 1,600 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினரைச் செர்பர்கள் கூட்டுக் கொலை செய்து கூட்டாகச் சடலங்களையும் இதுவரை வெளியிடாத இடங்களில் புதைத்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சுதந்திரத்தின் ஆயுதப் போரில் முக்கியமாகப் பங்கெடுத்தவர்களான ஹஷீம் தாச்சி [முன்னாள் ஜனாதிபதி], கதிரி வெசெலி, யாகுப் கிரெஸ்னிகி, செரெப் சலீமி ஆகியோர் பங்கெடுக்காத சுதந்திர விழா 17 ம் திகதியன்றி கொண்டாடப்பட்டது. அவர்கள் போர்க்கால தர்மங்களுக்கு எதிரான குற்றங்கள் செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு வழக்குகள் ஆரம்பிப்பதை எதிர்பார்த்துச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அக்குற்றங்கள் எதிர் தரப்பான செர்பர்களுக்கு எதிராக மட்டுமன்றித் தமது கொசோவா சகோதரர்களுக்கு எதிராகவும் செய்யப்பட்டவை என்று குறிப்பிடப்படுகிறது. காணாமல் போனவர்களில் ஒரு பகுதியார் கொசோவா விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த மேற்குறிப்பிட்ட தலைவர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்