துவக்கத்தின் விடியல்
பொன்மேனியன் வருகையில் புறப்படும் இரவுபோல்
பெண்ணவளின் துவக்கமே பூவுலகின் விடியலே
தண்மைதனின் தேக்கமே தியாகத்தின் திரிசுடராய்
தரணியிலே மேவிடும் தன்னலமிலா தத்துவமே
மண்ணுலகில் முகிழ்த்த மாண்புடைய சக்தியவர்
மணக்குமவள் மனத்தினில் மாணிக்கப் பரல்போல
புனிதமான பூமியினில் பூக்களாகப் பூத்திடுவாள்
புண்ணியவதி மகத்துவம் போற்றிடவே வாழ்த்திடுவோம்
மகளிர்தம் உலக மதிநாளில் நாமினைந்து
மங்கையர்க்கு சால்புடை மகுடத்தினை சுட்டிடுவோம்
அகமுணர்ந்து செய்யும் அர்ப்பணிப்பை எடுத்துரைத்து
அவர்களையே அன்பின் அடையாளம் ஆக்கிடுவோம்
பெற்றவளாய் உலகில் பேராற்றல் கொண்டொழுகி
உற்றவளாய் உயிரை உருவாக்கி வளர்த்திடுவாள்
சுற்றத்தினர் சுமைதனை சுகமாகவே தாங்கிடுவாள்
சந்ததியினர் தழைத்திட சளைக்காமல் உழைத்திடுவாள்.
வற்றாமல் பெய்திடும் வான்முகிலின் அம்சமாக
வாழவைக்கும் தெய்வம் வின்னுலக தேவதைகள்
கொற்கையம்மை வடிவினில் குவலயத்தை காத்திடுவாள்
கொலுவேற்றி கும்பிட்டு குலமகளை போற்றிடுவோம்
எழுதுவது :உத்திராபதி இராமன் DSP மலேசியா