அடுத்து ஆளப்போகிறவர்கள் யாரென்று பேராதிக்கம் செய்யும் இரு கட்சிகளிடயே ஆஸ்ரேலியர்கள் தெரிவுசெய்கிறார்கள்.
இன்று சனிக்கிழமை ஆஸ்ரேலியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. உள்ளூராட்சித் தேர்தல்களும், பொதுத் தேர்தல்களும் ஒரே நாளில் நடைபெறுகின்றன. ஆளும் கட்சியான லிபரல் கட்சி எதிர்க்கட்சியான லேபர் கட்சியிடம் நாட்டின் ஆளுமை போய்விடக்கூடாதென்று களத்தில் இறங்கியிருக்கிறது.
ஆஸ்ரேலியாவின் பெரிய கட்சிகளிரண்டும் நீண்ட காலமாகவே நாட்டைத் தங்களுடையே ஆட்சிகளுக்குள்ளேயே மாறி மாறிப் பிடித்து வைத்திருக்கின்றன. சிறுகட்சிகளோ, தனியான வேட்பாளர்களோ அந்த ஆதிக்க மைதானத்துக்குள் இடம் பிடிப்பது அரிதான காரியமாகும். ஆட்சியிலிருக்கும் லிபரல் -கொன்சர்வடிவ் கூட்டணியின் பிரதமர் ஸ்கொட் மொரிசனும் லேபர் கட்சியின்அந்தோனி அல்பனீசும் களத்தில் மோதுகிறார்கள்.
தேர்தலுக்கான பிரச்சாரக்காலம் குறிப்பிட்ட இரண்டு தலைவர்களுக்கிடையேயான போட்டி பற்றிய காலமாகியிருப்பதாகப் பலர் குறிப்பிடுகிறார்கள். கட்சிகளின் கோட்பாடுகள், அரசியல் போன்றவையைப் பற்றியும் அவை வரும் மூன்று வருடங்கள் நாட்டின் எதைச் செய்யும் என்பதைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அதிகம் உண்டாகவில்லை.
கட்சித் தலைவர்கள் இருவரும் கண்டம் முழுவதும் கடந்த வாரங்களில் பயணித்துத் தமக்கு ஆதரவு கோரியிருக்கிறார்கள். ஆஸ்ரேலியாவில் வாக்களித்தல் ஒரு குடிமகனின் கட்டாயமான கடமையாகும். இல்லையேல் அபராதம் கட்டவேண்டும். முதல் தடவை அத்தவறு செய்பவர்களுக்கு 20 ஆஸ்ரேலிய டொலர் தண்டம். ஏற்கனவே அத்தவறைச் செய்திருந்தவர்கள் 50 டொலர் அபராதமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்