பிரிட்டிஷ் முடியாட்சிக்குக் கீழிருப்பதா அல்லது விலகுவதா என்ற வாக்கெடுப்புக்கு ஆஸ்ரேலியா தயாராகிறது.

மகாராணி எலிசபெத் இறந்த பின்னர் பிரிட்டிஷ் முடியாட்சிக்குக் கீழிருக்கும் நாடுகள் பலவற்றில் தமக்கும் பிரிட்டிஷ் முடியாட்சிக்கும் இருக்கும் தொடர்புகளை அறுப்பதா அல்லது பேணுவதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சில நாடுகள் அந்த முடிவை எடுப்பது பற்றி மக்களிடம் கேட்க விரும்புகின்றன. சிலவற்றில் பாராளுமன்ற உறுப்பினர்களே முடிவெடுக்க விரும்புகிறார்கள். ஓரிரு வாரங்களுக்கு முன்னர் கனடியப் பா. உ-க்கள் தொடர்ந்தும் முடியாட்சிக்குக் கீழிருப்பதற்கு முடிவெடுத்தார்கள். 

ஆஸ்ரேலியாவின் பழங்குடி மக்களிடையே பிரிட்டிஷ் முடியாட்சி பற்றிக் கசப்பான அனுபவங்களே இருக்கின்றன. பொதுவாகவே ஆஸ்ரேலியாவெங்கும் முடியாட்சியுடன் தனது தொப்புள் கொடியை வெட்டிக்கொள்ளவேண்டும் என்ற கருத்து பரவியிருக்கிறது. மகாராணியின் பூதவுடல் மண்ணுக்குள் போக முன்னரே அவர்கள் பிரிட்டிஷ் முடியாட்சி மீதான அதிருப்தியைப் பகிரங்கமாக ஆஸ்ரேலியாவில் பலர் வெளிக்காட்டினார்கள்.

“எமது மக்கள் எப்பொழுதும் எங்கள் அரசாட்சி முறையை மேம்படுத்துவதற்கும், அதன் மூலம்  நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்குமான வழிகளைத் தேடத் தயாராக உள்ளனர். எங்கள் அரச தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கும் அதே நேரத்தில் குடிமக்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், எங்களிடம் உள்ள ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பாகும்,” என்று ஆஸ்ரேலியக் குடியரசின்  உப அமைச்சர் மட் திஸ்லெஸ்ட்வெய்ட் [Matt Thistlethwaite] குறிப்பிட்டார்.

நாட்டின் மீது ஆஸ்ரேலியப் பழங்குடி மக்களின் உரிமையை வெளிப்படுத்த அவர்களின் பிரதிநிதித்துவத்தைப் பாராளுமன்றத்தின் ஆளுமையில் காட்டுதல் பற்றி ஏற்கனவே ஆஸ்ரேலியா முடிவு செய்திருக்கிறது. அதை மனதில் கொண்டு அதே நேரம் முடியாட்சியின் தலைமையையும் ஒழித்துக்கட்டி உள்நாட்டிலிருந்து ஒருவரையே நாட்டின் தலைவராக நியமிக்கலாம் என்ற எண்ணமும் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

பழங்குடி மக்கள் 60,000 ஆண்டுகளுக்கும் அதிகமாக அங்கே வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், 1788 இல் அந்த நாட்டைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்த பிரிட்டிஷ்காரரின் அடையாளமே அங்கே தற்போது காணப்படுகிறது. பிரிட்டிஷ் முடியாட்சியால் தெரிவு செய்யப்படும் ஆளுனர் அங்கே பாரம்பரியத்தை இணைக்கும் தலைவராக நியமிக்கப்பட்டு வருகிறார். 

ஆஸ்ரேலியாவின் குடியரசு இயக்கம் [The Australian Republic Movement] சமீபத்தில் நாட்டின் சடங்குகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தலைவரை முடியாட்சிக்குப் பதிலாகத் தெரிவு செய்யும் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறது. அதன்படி பாராளுமன்றம் முன்நிறுத்தும் ஆஸ்ரேலியர்கள் சிலரிடையே மக்கள் தமது வாக்குகள் மூலம் ஒரு தலைவரைத் தெரிவுசெய்யலாம் என்றும் அவர் ஐந்து வருடங்கள் பதவியிலிருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. அந்தத் தலைமை நாட்டின் பிரதமர் பதவியேற்றல் போன்ற சம்பிரதாயச் சடங்குகளை நிறைவேற்றலாம் ஆனால் தனியாக எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *