ரஷ்யா தனது வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் முட்டுக்கட்டை போட்டது அமெரிக்கா.
உக்ரேனுக்குள் ஆக்கிரமித்த ரஷ்யாவைத் தண்டிக்கும் வகையில் அவர்களின் பொருளாதாரத்துக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் நடவடிக்கையொன்றை எடுத்திருக்கிறது அமெரிக்கா. இன்று முதல் ரஷ்யா தனது கடன்களை அமெரிக்க முதலீட்டாளர்களுக்குத் திருப்பிக் கொடுக்காத வகையில் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து அவர்கள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் குறுகிய கால விளைவாக அமெரிக்க முதலீட்டாளர்களே இழப்படைகிறார்கள் ரஷ்யா அல்ல
ரஷ்யா ஒரு மாதத்துக்கும் அதிகமாகவே சர்வதேச வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், ரஷ்யா வாங்கியிருக்கும் கடங்களை சர்வதேச முதலீட்டாளர்களுக்குத் திருப்பிச் செலுத்த வழிவகைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. தற்போது அதை அமெரிக்கா தனது நாட்டு முதலீட்டாளர்களுக்கு முடக்கிவிட்டது.
இதன் விளைவாக வெள்ளியன்று அமெரிக்க முதலீட்டாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய கடன் தொகை 100 மில்லியன் டொலர்களைத் திருப்பிக் கொடுக்க முடியாது. தற்போது இதை அமெரிக்கா மட்டுமே செய்திருப்பதால் ரஷ்யா அக்கடனைக் குறிப்பிட்ட அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு வேறு நாடுகளின் வழியாகக் கொடுக்குமா என்பது தெரியவில்லை.
அமெரிக்கா எடுத்திருக்கும் நகர்வின் நோக்கம் ரஷ்யா தனது கடன்களைச் செலுத்த முடியாத நிலைமையால் படிப்படியாக அவர்கள் மீதான நம்பிக்கையை உலக பொருளாதார, வர்த்தக வலயத்தில் தாழ்த்துவதேயாகும். அதனால், வெளியுலகத்துடனான ரஷ்யாவின் பொருளாதார நடவடிக்கைகளின் அளவு குறையும்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வெற்றியடைவதானால் மேலும் பல உலக நாடுகள் தத்தம் முதலீட்டாளர்களுக்கும் ரஷ்யா தனது கடன்களைத் திருப்ப முடியாமலும், தொடர்ந்து கடன் பெற முடியாமலும் செய்யவேண்டும். அதன் மூலம் நீண்ட காலத்துக்கு ரஷ்யாவின் பொருளாதார முதுகெலும்பு முறிக்கப்படும். மற்ற நாடுகளும் அமெரிக்காவின் வழியைப் பின் தொடர்கின்றனவா என்பதற்கான பதிலைக் காலம் தான் சொல்லவேண்டும் என்கிறார்கள் சர்வதேச பொருளாதார ஆராய்வாளர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்