அமெரிக்காவில் தீபாவளிக்குத் தபால் முத்திரை வெளியிடப் போரிட்டவர் அந்த நாளை விடுமுறையாக்கத் தயாராகிறார்.

அமெரிக்காவின் டெமொகிரடிக் கட்சியைச் சேர்ந்த கரோலின் மலோனி [Carolyn B. Maloney] நியூ யோர்க் நகரத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகும். அவர் அந்த நகரின் இந்தியப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து தீபாவளி தினத்தை அமெரிக்காவின் மாநில விடுதலை தினமாக்கவேண்டும் என்ற கோரிக்கையுடனான மசோதாவைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். ரோஹித் கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய அமெரிக்காவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த மசோதாவைச் சமர்ப்பிப்பது பற்றிய விழாவில் புதனன்று கலந்துகொண்டார்கள்.

மற்றைய மதங்களின் முக்கிய பெருநாட்களுக்கு அமெரிக்காவின் தபால் சேவையினர் தபால் தலை வெளியிட்டிருந்தனர், ஆனால், தீபாவளி அப்பட்டியலில் இல்லை. அதைச் சுட்டிக்காட்டித் தீபாவளியைக் கௌரவிக்க 2016 இல் அமெரிக்காவில் தபால் தலை வெளியிடுவதற்கு மலோனியே காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக அவர் ஏழு வருடங்களாக அமெரிக்கத் தபால் சேவையை வலியுறுத்திருந்தார்.

மலோனியின் மசோதா பாராளுமன்றத்தில் ஏற்கப்படுமானால் அமெரிக்க தேசிய அரச விடுமுறை தினமாக தீபாவளி அமுலுக்கு வரும்.

சாள்ஸ் ஜெ. போமன்