நாட்டின் தொழிலாளர் தேவையைப் பூர்த்திசெய்யக் குடியேற்றத்தை அதிகரிக்கத் திட்டமிடுகிறது ஆஸ்ரேலியா.

கொவிட் 19 தொற்றுக்களுக்கு முந்தைய காலத்தில் வருடாவருடம் சராசரியாக 1.4 % மக்கள் தொகை அதிகரிப்பைக் கொண்டிருந்த ஆஸ்ரேலியா கடந்த வருடம் 0.1% மக்கள் தொகை அதிகரிப்பைக் காண நேரிட்டிருக்கிறது. தேர்ந்த தொழிலாளர்கள், குடியேறுபவர்களைத் தமது பொருளாதார முன்னேற்றத்துக்கு அவசியமாகக் கொண்ட நாடான ஆஸ்ரேலியா மீண்டும் அவைகளை ஊக்குவிக்க என்ன செய்யலாமென்று திட்டமிடுகிறது.

புதிய குடிமக்கள் விபரங்களின்படி ஆஸ்ரேலியாவின் மொத்தக் குடிமக்கள் எண்ணிக்கை 25,7 மில்லியன் பேராகும். இது 2020 இல் 35,700 பேரால் அதிகரித்த பின்னராலாகும். இரண்டாம் உலகப் போரின் பின்னர் முதல் தடவையாக ஆஸ்ரேலியாவுக்கு வந்தவர்களை விட வெளியேறியவர்கள் கடந்த ஆண்டில் அதிகமானவர்கள். பல்கலைக்கழக மாணவர்கள், பிரத்தியேக துறைகளில் திறனுள்ள ஊழியர்கள் உட்பட 97,000 பேர் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இவ்வருடத்தில் 77,400 பேர் நாட்டிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட் 19 காலத்துக்கு முன்னர் சராசரியாக வருடாவருடம் ஆஸ்ரேலியா 160,000 பேருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கி வந்தது. அத்தொகையை 200,000 ஆக உயர்த்தி நாட்டின் நிறுவனங்களுக்குத் தேவையான பிரத்தியேக துறைகளில் திறனுள்ள ஊழியர்களைப் பெற்றுக்கொள்ள உதவும்படி நாட்டின் வர்த்தகத் துறையினர் கேட்டிருக்கிறார்கள்.

கட்டடத் தொழிலாளர்கள், பொறியியலாளர்கள், கல்வித் துறையினர், நிர்வாகிகள் உட்பட நாட்டின் நிறுவனங்களுக்குத் தேவையான ஊழியர்களில் மூன்றிலொரு பகுதியினருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வர்த்தக அமைப்பினர் குறிப்பிடுகிறார்கள். அரசுக்கு அறிவுரை வழங்கும் அமைப்பானது 2023 இன் நடுப்பகுதியில் பிரத்தியேகத் துறைகளுக்கான திறமையானவர்கள் சுமார் 105,000 பேருக்குத் தட்டுப்பாடு நிலவும் என்று கணித்திருக்கிறது.

கொரோனாக் கட்டுப்பாட்டுக்காலத்தின் பின்னர் சமீபத்தில் தான் ஆஸ்ரேலியா தனது எல்லைகளைச் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு கட்டுப்பாடுகளுடன் திறந்திருக்கிறது. நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் தமது முக்கிய பொருளாதாரத்துக்காக வெளிநாட்டு மாணவர்களை எதிர்பார்க்கிறது. பல தொழில் நுட்ப நிறுவனங்களும் தமக்குத் தேவையான பிரத்தியேகத் துறைக்கு ஊழியர்களை வரவழைக்க விரும்புகின்றன. அதே சமயம் அளவுக்கதிகமானவர்கள் நாட்டுக்குள் நுழையும் பட்சத்தில் நாட்டில் அதிகரிக்கும் தொழிலாளர்கள் ஊதியங்கள் தேவையான அளவு உயரமாட்டாது என்று எச்சரிக்கிறார்கள் தொழிற்சங்கத்தினர்.

சாள்ஸ் ஜெ. போமன்