இயந்திரக் குதிரையில் மண் மீட்கும் வீரன்!
இவ்வருடம் மார்ச் பிற்பகுதியில் எனது Facebook நண்பர் ஒருவரின் பக்கத்தில் மண்ணைக் காப்போம் (Save Soil) என்ற வாசகத்துடன் ஒரு நவீன ஆன்மீகவாதியின் பிரச்சாரப் பதிவுகளைப் பார்க்க முடிந்தது. இந்த விடயத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு நல்ல விடயமாகவே தோன்றியது. அவரது பக்தகோடிகளும் பல்வேறு நாடுகளில் தனித் தனியாகவும் சிறு குழுக்களாகவும் பிரச்சாரம் செய்ததையும் பார்க்க முடிந்தது.
இதனோடு தொடர்புபட்ட அவரது நிறுவனம் சார்ந்த அமைப்புக்களின் வலைப் பக்கங்களின்படி ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மண் வளத்தைப் பேணும்படி அந்தந்த நாடுகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இவரின் நூறுநாள் வேலைத்திட்டம் என்று அறிய முடிகிறது. அவரது BMW K1600 GT பைக்கில் ஐரோப்பாவில் தொடங்கி இந்தியா வரை 30,000 km தூரத்தை ஓடிக் கடந்து உலகெங்கும் மண்ணைக் காக்கப் பிரச்சாரம் செய்வதுதான் இவரது நூறு நாள்த திட்டம்.
அதன்படி மார்ச் 21 இல் ஐரோப்பாவில் லண்டன் நகரில் தொடங்கி, மத்திய கிழக்கில் தனது இயந்திரக் குதிரையில் பயணத்தை முடித்துக் கொண்ட இவர் 70 நாட்கள் கடந்த நிலையில் கடல் மார்க்கமாக இந்தியாவில் பைக்குடன் வந்து இறங்கியுள்ளார். தற்போது இந்தியாவிற்குள் மிகுதி முப்பது நாள் ஓட்டத்தில் தற்போது மும்முரமாக இருக்கிறார் என்று தெரிகிறது.
ஆனால் அதன் பின்னர் அந்த ஆன்மீகவாதி இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரை திட்டமிட்ட நூறுநாள் வேலைத்திட்டம்தான் இந்தப் பிரச்சாரத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. இவரது பயணத்தில் இவர் அடிக்கடி சொல்லும் விடயம், நாம் மண்ணின் கார்பன் அளவை அதிகரிக்க வேண்டும் என்பதாகும். அவரது கூற்றுப்படி உலகில் மூன்றிலிருந்து நான்கு பில்லியன் மக்கள் மண்ணைப் பாதுகாப்பதைப் பற்றித் தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏன் நாங்கள் மண்வளத்தை இழந்து கொண்டிருக்கிறோம். தவறான விவசாயச் செயற்பாடுகள், தொடர்ச்சியான காடழிப்பு நடவடிக்கைகள், தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவுகள் என்பவற்றால் எப்படி மண் வளத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம் என்று அவர் சொல்வார் என்று எதிர்பார்த்தேன்.
மண்ணைப் பாதுகாக்கக் நாம் ஒவ்வொருவரும் எமது வீட்டு மட்டத்தில் செய்ய வேண்டியவை, ஒவ்வொரு நாட்டிலும் விவசாயம் செய்வோர் எவ்வாறான நிலைபேறான மூலோபாயங்களைப் பின்பற்ற வேண்டும், தொழிற்சாலைகள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்று தெளிவாகச் சொல்லுவார் என்றும் எதிர்பார்த்தேன்.
ஆனால் அவரோ போகுமிடமெல்லாம் “Save soil, Let’s make it happen” என்று மந்திரம் சொல்வது போல அதையே திரும்பத் திரும்ப சொல்கிறார். அவருக்காகக் ஆங்காங்கு கூடும் மக்களையும் அதையே சொல்லச் சொல்கிறார். நான்கு பில்லியன் மக்கள் அவர் சொல்வதைக் கேட்கத் தயாராக இருக்கும் நிலையில் மக்களும் நாடுகளும் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டாமா?
மண்ணைப் பாதுகாப்பதற்கு இவருக்கு உண்மையான அக்கறை இருக்குமாக இருந்தால் லட்சக்கணக்கான மக்களை உலகெங்கும் சீடர்களாகப் பெற்றுள்ள இந்த நவீன சாமியார் மண்ணை எவ்வாறு பாதுகாப்பது என்பதையும் தனது ஒவ்வொரு காணொளியிலும் விளக்கமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் அல்லவா? அதுதானே உண்மையான விழிப்புப் பிரச்சாரமாக இருக்க முடியும்?
இது ஒருபுறம் அண்மையில் BBC நேர்காணலில் இந்த ஆன்மீக வியாபாரியின் நிறுவனத்தின் கடந்தகாலச் செயற்பாடுகள் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டபோது, குறிப்பாக நிறுவனத்தின் செயற்பாடுகளால் சுற்றுச்சூழல் பாதிப்புத் தொடர்பாக கேள்வி கேட்கும்போது அவரால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உண்மையில் ஒரு பழுத்த ஆன்மீகவாதி இப்படியான கேள்விக்குக் கோபப்பட மாட்டார் என்பதே எனது நம்பிக்கை.
உண்மையில் அவரை தியான நிலையம் இயற்கைக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் கட்டப்பட்டிருந்தால் அவர் கோபப்பட வேண்டிய தேவையே இல்லை அல்லவா? அதுவும் தனது 25ஆவது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக மக்கள் முன்னிலையில் ஆன்மீகத் தலைவராக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வெற்றிகரமாக இருக்கும் ஒருவரால் ஏன் ஒரு சாதாரண கேள்வியை எதிர்கொள்ள முடியவில்லை?
அவர் அந்தப் பேட்டியில் கோபத்துடன் தான் எந்த விதியையும் மீறவில்லை என அரசும் நீதிமன்றும் சொல்லிவிட்டதாகச் சொல்லத் தவறவில்லை. ஆனால் இந்தியாவில் சாமியார்களின் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததுதானே? ஆனால் அப்படிக் கோபத்துடன் பேசும்போதும், ஒரு சிறு பிரச்சனை இருந்தது என்றும் அதைச் சரி செய்தாகிவிட்டது என்றும் அவர் சொல்லியது பதிவாகி உள்ளது.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்பதுபோல, அவரது “மண்ணைக் காக்கும்” இந்தப் பயணத்தில் அவரது மோட்டார் சைக்கிள் மட்டும் அவரது 30,000 km பயணத்தை நிறைவு செய்யும்போது 4000 kg CO2 வினை வெளியேற்றப் போகிறது. அதாவது, இவரது பங்களிப்பில் இன்னும் மேலதிகமாக வளி மாசடையப் போகிறது. இந்த நூறு நாட்களில் இவரது இயந்திரக் குதிரை நூறே நாட்களில் வெளியேற்றும் CO2 வின் அளவு எனது கார் ஒரு வருடத்தில் வெளியேற்றும் மொத்த CO2 அளவின் இரு மடங்கு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமன்றி ஆங்காங்கு அவருக்குத் துணையாக ஒன்றுக்கு மேற்பட்ட SUV ரக வாகனங்கள் செல்வதையும் பார்க்க்க முடிந்தது. அப்படியானால் அந்த வாகனங்களும் வெளியேற்றக்கூடிய கார்பன் கழிவுகள் எவ்வளவு என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
உண்மையில் இவரது வாகனத் தெரிவு சூழல் மாசடையும் செயற்பாட்டுக்கு பங்களிப்பதாகவே இருக்கிறது. இது தொடர்பான கேள்விக்கு தான் எந்த வாகனத்தில் சென்றாலும் விமர்சனம் செய்பவர்கள் விமர்சனம் செய்யாது இருக்க மாட்டார்கள் என்று அலட்சியமாகக் கூறுகிறார். ஆனால் இப்படி விதண்டாவாதமாக பேசும் இவர் சூழலுக்கு தீங்கில்லாத ஒரு வழிமுறையை ஏன் தெரிவு செய்யவில்லை. மின்சக்தியில் இயங்கும் ஈருருளியைத் தெரிவு செய்திருக்கலாம். அதன் மூலம் எரிபொருள் தேவையற்ற வாகனங்களின் பாவனையையும் (Hybrid car) சேர்த்தே ஊக்குவித்திருக்கலாம். ஆனால் அப்படியான ஒரு முறையை ஏன் தெரிவு செய்யவில்லை என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.
இவை ஒருபுறம் இருக்க, மண் எமது மூதாதையினர் எமக்கு விட்டுச் சென்ற சொத்து என்று தனது பிரச்சாரத்தில் இவர் சொல்கிறார். அதனைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறார். அப்படியென்றால் தனது தியான மண்டபம் கட்ட ஏக்கர் கணக்கான நிலப்பகுதியில் உள்ள மரம் செடி, கொடிகளை அழித்துவிட்டு அந்த இடத்தில் சீமெந்துக் காட்டை உருவாக்கி வைத்திருப்பதை எந்த வகையில் சேர்ப்பது? இதனை சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்லாமால் வேறு எப்படிச் சொல்லுவது?
உண்மையில் மண்ணைக் காப்போப்போம் என்று வாயால் வடைசுடும் இந்த கார்பரேட் சாமியாரைவிட, நதிகளை உண்மையாகவே மீட்ட பலர் இந்தியாவில் இருக்கிறார்கள். மண்ணைக் காத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். உதாரணமாக இந்தியாவில் 1390 ஏக்கர் அளவுள்ள பல்லினத் தன்மையுள்ள காட்டினை உருவாக்கிய தனிமனிதனான யாதவ் பேங் என்பவர் இருக்கிறார். இவரைப் போன்றவர்கள்தான் உண்மையான சூப்பர் ஹீரோக்கள். தமிழ்நாட்டில் வளமான 150 ஏக்கர் மண்ணை முற்றாக மூடி சீமெந்துக் காட்டினை உருவாக்கிய ஆன்மீக வியாபாரியல்ல.
இவர் இப்படி மண்ணை மீட்கிறேன், வில்லை வளைக்கிறேன், விதியை மாற்றுகிறேன் என்று கூவிக் கூவி வியாபாரம் செய்வது இதுதான் முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் இது போன்று பல்வேறு பிரச்சரங்களைச் செய்துள்ளார். அவற்றை இன்னொரு பதிவில் பார்ப்போம்.
எழுதுவது :வீமன்