கம்போடியாவின் மெக்கூங் நதியில் பிடிக்கப்பட்டது உலகின் மிகப்பெரிய நன்னீர் வாழும் மீன்.
ஜூன் 13 ம் திகதியன்று கம்போடியாவின் மெக்கூங் நதியில் பிடிக்கப்பட்ட ஸ்டிங்ரே இன மீனொன்றின் நிறை சுமார் 300 கிலோவாகும். சுமார் நான்கு மீற்றர் நீளமான அந்த மீனே உலகில் நன்னீரில் பிடிக்கப்பட்ட மீன்களில் மிகப் பெரியதாகும்.
உள்ளூர் மீனவரொருவர் தான் பிடித்த அந்த மீனைப் பற்றி உடனடியாக அப்பிராந்தியத்திலிருந்த நீர்விலங்கு ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவித்தார். வட்டமான அந்த மீனுக்கு “முழு நிலவு” என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்கு முன்னர் 2005 இல் தாய்லாந்தில் பிடிக்கப்பட்ட ராட்சத அளவிலான கெழுத்தி மீனொன்று 293 கிலோவாக இருந்தது. அதுவே இதுவரை நன்னீரில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய மீன் என்ற சாதனையைப் பெற்றிருந்தது.
வாலுக்கு அருகே ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் காட்டும் பொறி ஒன்று பொருத்தப்பட்ட “முழு நிலவு,” நதியிலேயே மீண்டும் விடப்பட்டது. அந்த மீன் வரும் வருடங்களில் எங்கெங்கே நகர்கிறது, அதன் வாழ்வு எப்படிப்பட்டது போன்ற விபரங்களை அந்தப் பொறி மூலம் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து அவதானிப்பார்கள்.
குறிப்பிட்ட பகுதியில் சமீபத்தில் காணப்பட்ட நாலாவது மிகப்பெரிய மீன் இதுவாகும். இந்த மீன் வகை தனது வாழ்நாள் முழுவதையும் நன்னீரிலேயே கழிக்கிறது. சீனா, தாய்லாந்து, மியான்மார், லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளினூடாக ஓடுகிறது மெக்கூங் நதி.
சாள்ஸ் ஜெ. போமன்