ஜோன்சன் அரசிலிருந்து மேலுமொரு முக்கிய உறுப்பினர் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதால் விலகினார்.
பிரிட்டிஷ் கொன்சர்வட்டிவ் கட்சி அரசுக்கு மேலுமொரு அவப்பெயர் உண்டாகியிருக்கிறது. இம்முறை அதைச் செய்தவர் கட்சியின் உறுப்பினர்களை பிரதமர் விரும்பும் வகையில் இயங்க வைப்பவரான கிரிஸ் பின்ச்சர் ஆகும். மூன்று மாதங்களுக்குள் ஆளும் கட்சிக்குள் பாலியல் சம்பந்தப்பட்ட தவறுகளைச் செய்ததாக வெளியாகியிருக்கும் ஆறாவது சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது
தான் அளவுக்கதிகமாக மதுவை அருந்தியிருந்ததால் எல்லை மீறி நடந்து எல்லோரையும் அவமானப்படுத்திவிட்டதாகச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொண்ட கிரிஸ் பின்ச்சர் தனது பொறுப்புக்களிலிருந்து விலகினார். அவர் மதுவருந்தும் விடுதியொன்றில் இரண்டு ஆண்களின் ஆணுறுப்புக்களைத் தடவியதாக வியாழனன்று செய்திகள் வெளியாகியிருந்தன. குறிப்பிட்ட சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பின்ச்சர் தலைகால் தெரியாமல் மதுவருந்தியிருந்ததாகக் குறிப்பிட்டார்கள்.
அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகிய பின்ச்சர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் ஒரு சுயேச்சையாக இயங்க விரும்புகிறார்.
பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரண்டு கண்டங்களிடையே, எட்டு நாட்கள் பயணம் செய்து பல முக்கிய மாநாடுகளில் பங்குபற்றி விட்டு நாடு திரும்பியிருந்த சமயத்திலேயே இந்த அவமானம் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. ருவாண்டா, ஜேர்மனி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கு ஜோன்சன் பயணித்திருந்தார். ஸ்பெய்னில் அவர் நாட்டோ அமைப்பின் முக்கிய மாநாட்டில் பங்குபற்றியிருந்தார்.
மே மாதத்தில் கொன்சர்வட்டிவ் கட்சி பா. உ இம்ரான் அஹ்மத் கான் பாலியல் குற்றமொன்றில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். அதையடுத்த ஓரிரு நாட்களிலேயே மேலுமொரு பெயர் வெளியிடப்படாத பா.உ கற்பழிப்புக் குற்றம் சாட்டப்பட்டு பதவியிலிருந்து விலகினார். ஏப்ரல் மாதத்தில் டேவிட் வோர்பர்ட்டன் என்ற பா.உ பல பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அதையடுத்து நீல் பரிஷ் என்ற பா.உ பாராளுமன்றத்தில் ஆபாசப் படம் பார்த்ததுக்காகப் பதவியிறங்கினார்.
இதைத் தவிர பிரதமர் ஜோன்சன் தனது தற்போதைய மனைவி 2018 இல் அவரது காதலியாக இருந்த சமயத்தில் அவருக்காக உயர்பதவியொன்றைக் கொடுக்க முயன்றதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஜேர்மனியில் ஜி 7 நாடுகளின் மாநாட்டில் பங்குபற்றிய பிரதமர் ஜோன்சனிடம் அவரது கட்சி அங்கத்துவர்கள் மீது சமீப காலத்தில் வெளியாகியிருக்கும் பல அவமானகரமான விபரங்கள் பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டது. “நாட்டை ஆளுவதற்கு வந்தால் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அவற்றைப் பற்றி நினைப்பதை ஒதுக்கிவிட்டு எடுத்த கடமையை நிறைவேற்றுவதாகும். ஊடகங்களுடனான வேறுபாட்டைக் கவனிக்காமல் ஒதுக்கவேண்டும். எங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் அரசியலைப் பற்றிப் பேசவேண்டும்,” என்று ஜோன்சன் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்