அமெரிக்காவின் மாநிலங்களில் அரைப்பகுதியினர் கருக்கலைப்பு உரிமையைப் பறிக்கத் தயாராகின்றன.

அமெரிக்கப் பெண்களுக்குக் கருக்கலைப்புச் செய்யும் உரிமை ஒரு தனி மனித உரிமை என்று சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. ரிபப்ளிகன் கட்சியின் பல அரசியல்வாதிகளின் இடைவிடாத முயற்சியால் அந்த உரிமையை அமெரிக்காவின் தற்போதைய உச்ச நீதிமன்றம் பறித்துவிட்டது. அதையடுத்துத் தத்தம் மாநிலங்களில் கடுமையான சட்டங்கள் மூலம் கருக்கலைப்பை நிறுத்த பல மாநிலங்கள் தயாராகின்றன.

நியூ யோர்க் மாநிலத்தைப் பொறுத்தவரை கருக்கலைப்பு என்பதை ஒரு அடிப்படை உரிமை என்று சட்டம் மாற்றப்படவிருக்கிறது. தற்போது கருக்கலைப்பு, கருத்தடை மருந்துகள் ஆகியவைகள் அங்கே அனுமதிக்கப்படுகின்றன. அவற்றைப் பெறுவது மனிதரின் அடிப்படை உரிமை என்று சட்டம் மாற்றப்பட்ட மாநிலத்தில் அது பொதுஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்.

கருக்கலைப்புத் தடுக்கப்பட்ட மாநிலங்களில் வாழும் அமெரிக்கர்கள் லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிகோ வரை சென்று கருக்கலைப்புச் செய்துகொள்கிறார்கள். கருத்தடை மருந்துகளையும் தடை செய்யும் மாநிலங்களுக்கு விளையாட்டுப் பொம்மைகளுக்குள் அம்மருந்துகளை அனுப்பும் அமைப்புகளும் உள்ளன. ஆர்ஜென்ரீனா, கொலம்பியா ஆகிய நாடுகளும் சமீபத்தில் கருத்தடையைச் சட்டபூர்வமாக்கியிருக்கின்றன.

அமெரிக்கப் பெண்களுடைய கருக்கலைப்பு உரிமைக்காக உதவும் குழுக்களுக்கு உதவும் நடவடிக்கையை எடுத்திருக்கிறது கூகுள். அமெரிக்கப் பெண்கள் கருக்கலைப்பு மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் அவ்விபரங்களை அழித்துவிட கூகுள் முடிவெடுத்திருக்கிறது. அத்துடன் குடும்ப அங்கத்தினரின் வன்முறைக்கு உள்ளாகி அதற்கான பாதுகாப்பான இடங்களை நாடும் பெண்களின் இட விபரங்களையும் கூகுள் அழித்துவிடும். அந்த இடங்களுக்கு அப்பெண்கள் போனது கூகுளில் தெரிந்தாலே அவற்றை கூகுள் அழித்துவிடும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *