ரஷ்யக் கொடியுடன் துருக்கியை நோக்கிச் செல்லும் கப்பலைக் கைப்பற்றும்படி உக்ரேன் வேண்டுதல்.
துருக்கியிலிருக்கும் கரசு என்ற துறைமுகத்தை நோக்கிச் செல்லும் ரஷ்யக் கொடியேந்திய Zhibek Zholy என்ற கப்பலைக் கைப்பற்றும்படி உக்ரேன் அரச வழக்கறிஞர் துருக்கியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். காரணம் அந்தக் கப்பல் பெர்டியான்ஸ்க் என்ற ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரேன் நகரமான பெர்டயான்ஸ்க்கிலிருந்து உக்ரேனின் உணவுத் தானியங்களைக் கொண்டு செல்வதாக அவர் குறிப்பிட்டார்.
உக்ரேனின் கோரிக்கை பற்றி துருக்கிய அரசு எந்தவிதப் பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை. உக்ரேனிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தானியங்களைக் கைப்பற்றி ஏற்றுமதி செய்து வரும் ரஷ்யா அதைத் துருக்கியிலும் விற்பதாக உக்ரேன் ஏற்கனவே குற்றஞ்சாட்டி வந்தது. அதுபற்றி தாம் விசாரணை நடத்தியதாகவும் இதுவரை அப்படியான குற்றமெதையும் இதுவரை துருக்கியில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் துருக்கிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
Zhibek Zholy கப்பல் கசக்ஸ்தானிலிருக்கும் நிறுவனம் ஒன்றால் இயக்கப்படுகிறது. அதை ரஷ்ய நிறுவனமொன்று வாடகைக்கு எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்ட நிறுவனம் மீது எந்த முடக்கமும் இல்லை என்றும் கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்தது.
சாள்ஸ் ஜெ. போமன்