ஜோன்சனின் இடத்தை நிரப்ப பத்துப் பேர் தயார். களத்தில் குதிக்க மேலும் சிலர் வரவிருக்கிறார்கள்.
ஐக்கிய ராச்சியத்தின் பிரதமரான போரிஸ் ஜோன்சன் அடுத்தடுத்துப் பல அரசியல் தவறுகளைச் செய்ததாலும், கட்சியின் உயர்மட்டத்தினரின் தவறுகள் பல வெளியாகியதாலும் பதவி விலக நேரிட்டது. அதையடுத்து அவர் இடைக்காலப் பிரதமராகத் தொடர்கிறார். அவரது இடத்தை நிரப்ப கொன்சர்வடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒன்பது பேர் ஏற்கனவே களத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்களில் மூவர் பெண்கள்.
ரிசி சுனாக், பென்னி மோர்டவுண்ட், சாஜித் ஜாவித், நடிம் ஸஹாவி, ஜெரொமி ஹண்ட், சுவெல்லா பெவர்மான், கெமி படனொக், கிரான் ஷப்ஸ், டொம் டுகன்ஹட் ஆகியோரே அவர்கள். லிஸ் டுருஸ், ரிசி சுனாக் ஆகிய இருவரும் பலரின் ஆதரவைப் பெற்றவர்கள்.இவர்களில் லிஸ் டுருஸ் ஞாயிறன்று மாலை தானும் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.
கடைசிக் கட்டத்தில் கொன்சர்வடிவ் கட்சி அங்கத்துவர்களே தமது புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பீட்டில் முன்னாள் வர்த்தக அமைச்சர் சுனாக் அவர்களிடையே அதிக ஆதரவு பெற்றிருப்பதாகத் தெரிகிறது. சாஜித் ஜாவித், சுனாக் ஆகிய இருவருமே சமீபத்தில் ஜோன்சன் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துப் பதவி விலகியவர்கள். அதையடுத்துப் பலரும் அவர்களைத் தொடர காகிதக் கோட்டை போல ஜோன்சன் ஆதரவிழந்து பதவி விலகினார்.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Infosys இன் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகளின் கணவரே ரிசி சுனாக். மனைவி அக்சதா தனது சொத்துக்களுக்கு ஐக்கிய ராச்சியத்தில் வரி கட்டுவதில்லை என்று சமீபத்தில் வெளியாகி மக்களிடையே அதுபற்றிய சர்ச்சை ஏற்பட்டது. சுனாக்கின் சொத்துக்கள், வரிகள் சம்பந்தமான சர்ச்சைகள் அவர் மீது சந்தேக மேகங்களாகப் படர்ந்திருக்கின்றன.
ஜோன்சன் கட்சியின் தலைமைக்குப் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து நின்று தோல்வியுற்றவர் ஜெரொமி ஹண்ட். வெவ்வேறு துறையில் அமைச்சராக இருந்த அனுபவமுள்ளவர் அவர். சுனாக் பதவியை உதறியதும் வர்த்தகத்துறையை ஏற்றுக்கொண்டவர் நடீம் ஸஹாவி. ஒன்பது பேரில் அமைச்சர்களாக இருந்து அனுபவம் பெற்றவர்கள் பலர். வெறும் பாராளுமன்ற உறுப்பினரில் போட்டிக்கு இறங்கியவர் டொம் டுகன்ஹட் மட்டுமே.
சாள்ஸ் ஜெ. போமன்