இத்தாலியின் பெரும்பாலான மாணவர்கள் அடிப்படைக் கல்வியில் தோற்றுப்போகிறார்கள்.
பெருமளவில் இத்தாலிய மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் தேறாமலேயே வெளியேறுகிறார்கள். அதன் விளைவாக ஐந்திலொரு பங்கு மாணவர்கள் சமூகத்தின் அடிமட்டத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். பாதிப்பங்கு மாணவர்கள் கணிதபாடத்தில் சித்தியடையாமலேயே மேல் நிலைப்பள்ளியை முடித்துக்கொள்கிறார்கள். இத்தாலிய மொழியில் தேறுகிறவர்கள் 44 % பேர் கோட்டைவிடுகிறார்கள். இந்த நிலைமையை நாட்டின் செஞ்சிலுவைச் சங்கத்தினர் சுட்டிக்காட்டி இது அவர்களின் வேலைவாய்ப்புகளுக்கு இடையூறாகவும், கல்வித்துறைக்கு மோசமான விளைவை ஏற்படுத்தி நாட்டின் ஜனநாயக வளர்ச்சியை தடுப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
நாட்டின் தென் பகுதிகளிலோ நிலைமை இன்னும் மோசமாக இருப்பதாகக் காட்டுகிறது செஞ்சிலுவைச் சங்கத்தினரின் கல்வி பற்றிய ஆராய்ச்சியின் முடிவுகள். மேல் நிலைப்பள்ளியை விட்டு அங்கே வெளியேறுபவர்களில் பாதிப்பங்கினர் அல்லது அதற்கும் அதிகமானோர் தாம் பெறவேண்டிய தகமைகளைப் பெறாமலிருக்கிறார்கள். அதனால் அவர்களுடைய கல்வியறிவு 13 வயதினர் அளவே இருக்கிறது.
படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறவர்கள் ஏழைகளும், புலம்பெயர்ந்து இத்தாலியில் வாழ்பவர்களுமே. 1.9 மில்லியன் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை சுமார் 5.6 மில்லியன் பேர் ஆகும். நாட்டின் 20 மாகாணங்களில் ஆறில் வேலையில்லாத இளவயதினரின் எண்ணிக்கை வேலைவாய்ப்புப் பெற்ற இளவயதினரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறது.
இத்தாலியின் இன்றைய நிலைமைக்குக் காரணமாக நாட்டின் மோசமான பொதுநல அமைப்பு என்று சுட்டிக் காட்டுகிறது செஞ்சிலுவைச் சங்கம். குழந்தைகளுக்கான பாலர்பள்ளிகள் நாட்டின் பெரும்பாகத்தில் இல்லை. நாட்டின் தெற்கின் அது முற்றாகவே இல்லை. பாலர் பள்ளிகள் இல்லாமலிருப்பதும், பாடசாலைகளில் மதிய போசனம் பாடசாலைகளில் கொடுக்கப்படாமையும் மாணவர்களின் கல்வித்தகைமையைக் குறைக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்