கஷோஜ்ஜி கொலையின் பின்னர் சவூதிய இளவரசர் முதல் தடவையாக ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம்.
ஜூலை 26 ம் திகதியன்று கிரீஸுக்கு வந்திறங்கினார் சவூதிய இளவரசர் முஹம்மது பின் சல்மான். சவூதிய அரசகுடும்பத்தை விமர்சித்து வந்ததால் மிரட்டலுக்கு உள்ளாகிப் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த ஜமால் கஷோஜ்ஜி துருக்கியிலிருக்கும் சவூதியத் தூதரகத்தில் 2018 இல் கொலை செய்யப்பட்டார். அவரது உடலுக்கு என்ன நடந்தது என்பதும் மர்மமாகவே இருக்கும் அந்தச் சம்பவத்துக்குப் பின்னால் சவூதிய இளவரசன் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அதனால் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட விமர்சனங்களால் மேற்கு நாடுகளில் முஹம்மது பின் சல்மான் புறக்கணிக்கப்பட்டார். அதன் பின்னர் முதல் தடவையாக அவர் இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தினுள் உத்தியோகபூர்வமாக விஜயத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் ஜோ பைடன் அரசாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த முஹம்மது பின் சல்மானைச் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சவூதிக்கு சென்றிருந்த ஜோ பைடன் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னரே கிரீஸுக்கு அவர் விஜயம் செய்திருக்கிறார். அதையடுத்து அவர் இவ்வார இறுதியில் பிரான்சுக்குப் பயணிக்கவிருக்கிறார். இவ்விரண்டு நாட்டுத் தலைவர்களையும் சந்திக்கவிருக்கும் முஹம்மது பின் சல்மான் ராஜதந்திர உறவுகளைப் பற்றிக் கலந்தாலோசிக்கவிருப்பதாகவும், மற்றைய துறைகளில் கூட்டுறவுத் திட்டங்களை விஸ்தரிப்பது பற்றியும் பேசவிருப்பதாகச் சவூதியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் எரிபொருட்களைப் புறக்கணித்து வரும் ஐரோப்பிய நாடுகள் சவூதி அரேபியா தனது பெற்றோல் உறிஞ்சலை அதிகரிக்கும்படி வேண்டி வருகின்றன. இதுவரை அதற்குச் சவூதி அரேபியா செவிகொடுக்கவில்லை. கடந்த வாரம், சவூதிய புதிய எரிசக்தி அமைச்சர் பிரெஞ்ச் ஜனாதிபதியைச் சந்தித்து எரிசக்தி ஒப்பந்தங்களை ஏற்படுத்தியிருக்கிறார்.
கிரீஸில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முஹம்மது பின் சல்மான் தனது நாட்டுக்கும், கிரீஸுக்கும் இடையே மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கான தொடர்புகளை நிறுவவிருப்பதாகவும் அதன் மூலம் மிக மலிவான விலையில் ஐரோப்பாவுக்கு எரிசக்தியைக் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்