மகாராணியின் இறுதிச்சடங்கு முடிந்தவுடன் அமெரிக்காவுக்கு லிஸ் டுருஸ் பயணமாவார்.
ஐக்கிய ராச்சியத்தின் புதிய பிரதமர் பதவியேற்ற லிஸ் டுருஸ் தனது அதி முக்கிய திட்டங்களில் ஒன்றாக, வெகுவாக விலையுயர்ந்து விட்ட நாட்டு மக்களின் மின்சாரச் செலவுகளைக் கட்டுப்படுத்தலை அறிவித்தார். எந்த ஒரு வீட்டுக்கும் மின்சாரச் செலவு வருடத்துக்கு சுமார் 2, 880 டொலரைத் தாண்டக்கூடாது என்ற எல்லையைக் கொண்டுவந்தார். அது பற்றிய விபரங்களை நிதியமைச்சு அறிவிக்க முன்னரே மகாராணியின் இறப்பு மக்களின் கருத்தை அதன் மீது திருப்பிவிட்டது.
சுமார் 2,000 டொலர்களை வருடத்துக்கான சராசரி மின்சாரச் செலவாகக் கட்டிவந்த குடும்பமொன்றுக்கு அது சுமார் 3,500 ஆக உயர்ந்துவிட்டிருக்கிறது. தொடர்ந்தும் விலையேற்றம் உண்டாகுமென்றும் அது 2023 இல் சுமார் 6,500 டொலர்களை எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மற்றைய பொருட்களின் விலையுயர்வுகளாலேயே பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மின்சாரச் செலவின் உயர்வும் பெரும் பாரமாகியிருந்ததால் அதையே பிரதமரானதும் டுருஸ் முதன் முதலில் கையாண்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியபின் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீண்டும் மாற்றுதல், உக்ரேன் போருக்கான உதவிகளைச் செய்தல், நாட்டின் தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கும் வேலை நிறுத்தங்களை எதிர்கொள்ளல் ஆகியவை டுருஸ் முன்னால் காத்திருக்க, மகாராணியின் இறப்பு அவருக்கு மேலும் அவகாசத்தைக் கொடுத்திருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள்.
மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் பங்குகொள்ள லண்டன் வந்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதியைத் திங்களன்று சந்திக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அச்சந்திப்பு பின்போடப்பட்டிருப்பதாகப் பிரதமரின் காரியாலயம் தெரிவித்திருக்கிறது. பதிலாக லிஸ் டுருஸ் எமிரேட்ஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் அரசர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறார். ஆஸ்ரேலிய, நியூசிலாந்துப் பிரதமர்களுடனும் டுருஸ் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக அவரது காரியாலயத்திலிருந்து குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதையடுத்து டுருஸ் ஐ.நா சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூ யோர்க் பயணமாவார். அங்கே புதனன்று கூட்டங்கள் முடிவடைந்த பின்னர் அவர் ஜோ பைடனைச் சந்திப்பார். அதையடுத்து நாடு திரும்பும் டுருஸ் கொன்சர்வடிவ் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் மாநாட்டில் பங்குகொண்டு தனது அரசாங்கத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை அறிவிப்பார்.
சாள்ஸ் ஜெ. போமன்