தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான ஆயுதங்களை இஸ்ராயேல் தராதது பற்றி அதிர்ச்சியடைந்ததாக செலென்ஸ்கி குறிப்பிட்டார்.
தமது எல்லையை அடுத்திருக்கும் பாலஸ்தீனர்கள் தங்களைத் தாக்கும்போது இஸ்ராயேல் பாவிக்கும் பாதுகாப்புக் கேடயமான [Iron Dome system] ஆயுதங்களைத் தமக்குத் தரும்படி உக்ரேன் ஜனாதிபதி இவ்வருடம் மார்ச் மாதத்திலேயே வேண்டிக் கொண்டிருந்தார். ஆனால், இதுவரை தமக்கு இஸ்ராயேலிடமிருந்து எந்தவித ஆயுதங்களும் கிடைக்கவில்லை என்பதைப் பற்றி செலென்ஸ்கி அதிருப்தியைத் தெரிவித்தார்.
“இஸ்ராயேலியர்களுக்கு என்னாயிற்று என்று எனக்குக் கிஞ்சித்தும் விளங்கவில்லை. எங்களுக்கு மேல் ரஷ்யா பிரயோகிக்கும் ஏவுகணைகளிலிருந்து எம்மைக் காத்துக்கொள்ளும் பாதுகாப்புக் கவசத்தை எமக்குத் தராதது அதிர்ச்சியையே தருகிறது,” என்று உக்ரேன் ஜனாதிபதி பிரெஞ்ச் பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
உக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமித்ததை இஸ்ராயேல் கண்டித்திருக்கிறது, உக்ரேன் மக்களின் மனிதாபிமான உரிமைகள் பாதிக்கப்பட்டிருப்பதற்காகத் தனது வேதனையையும் தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவுடனும் நெருங்கிய உறவைக் கொண்ட நாடான இஸ்ராயேல் உலகின் பல நாடுகளைப் போல ரஷ்யா மீது பொருளாதார, அரசியல் முடக்கங்களை கையாளவில்லை.
ரஷ்யாவின் சிறகுக்குள் இருக்கும் சிரியாவைப் பாவித்து இஸ்ராயேல் மீது தாக்குதல் நடத்தும் ஈரானியப் படைகளைத் தாக்குவதற்காக இஸ்ராயேல் சிரியாவுக்குள் நுழைவதுண்டு. சிரியாவில் தனது இராணுவத்தையும் வைத்திருக்கும் ரஷ்யா இஸ்ராயேல் அங்கே நுழைந்து தாக்குவதைக் கண்டும் காணாதது போல ஒதுங்கிக் கொள்ளுதல் அவசியமாகும். எனவே உக்ரேனுக்கும் தனது ஆதரவையும் அபிமானத்தையும், தெரிவித்து வரும் இஸ்ராயேல் ஆயுத உதவிகளைச் செய்யாமல் தவிர்த்து வருகிறது.
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்குமிடையே யுத்த நிறுத்தம், பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதி திரும்பவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்கிறார் இஸ்ராயேல் பிரதமர் யாய்ர் லபிட்.
சாள்ஸ் ஜெ. போமன்