தனது பெயரப்பிள்ளைகள் இனிமேல் “அரசகுமாரர்கள், அரசகுமாரிகள்,” என்று அழைக்கப்படலாகாது என்றார் டென்மார்க்கின் மகாராணி.
டென்மார்க் மகாராணி மார்கரேத்த II முடியாட்சிக்குரிய குடும்பத்தினர் பற்றிய முடிவுகள் சிலவற்றை அறிவித்திருக்கிறார். ஐரோப்பாவின் மற்ற அரசகுடும்பத்தினர் சமீப காலத்தில் செய்திருக்கும் மாற்றங்கள் போன்றவையே அவை என்று குறிப்பிடப்பட்டாலும் மகாராணியின் இரண்டு மகன்களும் தமது தாயாரின் புதிய முடிவுகளால் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.
பட்டத்துக்குரிய இளவரசன் மூத்த மகன் பிரடெரிக்கும் இளைய மகன் யோக்கிம் ஆகியோருமே இளவரசர்கள். அவர்களிருவருக்கும் தலைக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். யோக்கிம் பாரிஸில் தனது இரண்டாவது மனைவியுடனும் இரண்டு பிள்ளைகளுடனும் வாழ்கிறார்.
மகாராணியின் புதிய அறிவிப்பின்படி யோக்கிமின் பிள்ளைகள் இனிமேல் தங்களை அரசகுமாரர்கள், அரசகுமாரிகள் என்று குறிப்பிட்டுக்கொள்ளலாகாது. அவர்கள் தங்களைப் பிரபுக்கள் என்று மட்டுமே அழைத்துக்கொள்ளலாம். இந்த முடிவு அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து ஆரம்பமாகிறது.
“யோக்கிமின் பிள்ளைகள் தங்களுடைய வாழ்வைச் சுதந்திரமாக ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்புக் கொடுப்பதே இதன் நோக்கம். அரச குடும்பத்தின் கடமைகளுக்குள் அவர்களைச் சேர்த்து அவர்களின் வாழ்வைக் கட்டுப்படுத்த நான் விரும்பவில்லை,” என்கிறார் மகாராணி.
தனது தாயார் இந்த முடிவை எடுப்பதில் நீண்ட காலம் திட்டமிட்டிருந்ததாகக் குறிப்பிடும் இளவரசன் யோக்கிம் தனக்கு அது பற்றிச் சிந்திக்க ஐந்தே நாட்கள் அவகாசம் கொடுத்ததாகவும் குறைப்பட்டிருக்கிறார். யோக்கிமின் மகன் நிக்கொலாய் பத்திரிகையொன்றுக்குக் கொடுத்த பேட்டியில் தனது பெற்றோரும் தாமும் இதுபற்றிப் பெரும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்