“என்ன சொன்னாலும் மணிரத்தினத்துக்கு துணிச்சல் இருக்கு”| பொன்னியின் செல்வனும் (தமிழ்) ஒரு ரசிகரின் பார்வையும்
கடந்த சில வருடங்களாகவே தமிழ்நாட்டின் கனவுத் தொழிற்சாலையில் சில படைப்புகளை சர்ச்சைக்குரியவையாக மாற்றுவது அந்தத் துறையின் அம்சமாகவே மாறிவிட்டது. சில வேளைகளில் அந்தச் சர்ச்சை அல்லது எதிர்ப்பு படத்தை படத்தைக் கடுமையாகப் பாதித்த அதேவேளை, சில படங்களுக்கு எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததும் நடைபெற்றுள்ளது.
அந்த வகையில் தற்போது வெறும் வாய்களுக்கு அவலாகி இருக்கும் திரைப்படம்தான் PS-1 என்ற பொன்னியின் செல்வன் பாகம் 1. பொதுவாகவே ஒரு நாவலைத் திரைப்படமாக எடுக்கும்போது அது நாவலின் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவது இலகுவான விடயமாக இருப்பதில்லை. இதனை கடந்த காலங்களில் மக்களிடையே பெரிதும் பேசப்பட்ட நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டபோது அவதானிக்க முடிந்தது. அந்தப் படங்களை எடுத்த இயக்குனர்களும் இதே பிரச்சினையைக் கடந்துதான் சென்றிருப்பார்கள்.
அதிலும் இந்தப் படம், சோழ பரம்பரையின் பொற்காலத்தை ஆரம்பித்து வைத்த ராஜராஜ சோழனான அருள் மொழி வர்மன், அவரது அண்ணன் ஆதித்த கரிகாலன், சகோதரி குந்தவை, குந்தைவையின் கணவரான வந்தியத் தேவன் ஆகியோரை மையப் புள்ளிகளாக வைத்து உண்மையும் கற்பனையும் கலந்து புனையப்பட்ட நாவல் என்ற வகையில் எம்மவரில் எதிர்பார்ப்பு மிகவும் அதீதமானதாக அமைந்துவிட்டது. இதனாலேயே பலருக்கு படம் தொடர்பில் இருக்கும் எதிர்பார்ப்பை இந்தக் கதையைப் பொறுத்தவரையில் எந்த இயக்குனராலும் திருப்திப்படுத்த முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும்.
ஆரம்பத்தில் மணிரத்னம் படத்தை ஒழுங்காக எடுக்க மாட்டார்; இவர் அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டார் என்ற சர்ச்சை எழுந்து ஓய்ந்தது. பின்னர் நடிகர்கள் தெரிவு தொடர்பாக ஆளாளுக்கு விமர்சித்தார்கள். ஜெயம் ரவியின் குரல் அருள்மொழி வர்மனுக்குப் பொருந்தாது என்று சொன்னார்கள். கார்த்தி, வந்தியதேவனின் பாத்திரத்துக்குப் பொருந்தவில்லை என்றார்கள். (சொன்னவர்கள் அருள்மொழி வர்மனின் குரலை நன்கு அறிந்தவர்கள், வந்தியத் தேவனை நேரில் பார்த்தவர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு தூரம் ஆணித்தரமாக விமர்சித்திருக்க மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்). அது போலவே வேறு சில வேடங்களுக்கும் அவர் அதுக்குப் பொருந்த மாட்டார். இவர் இதுக்குப் பொருந்த மாட்டார் போன்ற கருத்துக்களை வலைத்தளமெங்கும் அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார்கள்.
அதன் பின்னர், பாடல்கள் வெளி வந்ததும் இவர்களில் பலர், நடிகர்களை விட்டுவிட்டுப் பாடல்களில் குறைகாணப் புறப்பட்டார்கள் இந்த நவீன நக்கீரர்கள். பாடல்களின் இசை சோழர் காலத்துத் தமிழர்களின் இசைவடிவங்களைப் பிரதிபலிக்கவில்லை என்ற ரீதியில் பலரும் பதிவிட்டதையும் பார்க்க முடிந்தது. ஏனைய பல படங்களில் AR ரஹ்மான் புதுவித இசை வடிவங்களை பயன்படுத்தியதை ஏற்றுக் கொண்டவர்களே இந்த இடத்தில் தமது அதிருப்தியை தெரிவித்தே கடந்து சென்றார்கள். கர்நாடக இசை தமிழர்களின் இசை என்பதை முறையாக ஆய்வு செய்து ஏபிரகாம் பண்டிதர் நிரூபித்த பின்னர், கர்நாடக இசை கர்நாடகாவிலிருந்து வந்தது, ஆரியர் தந்தது என்று சொல்லித் திரிவோரிடமிருந்து இவ்வாறான விமர்சனம் வராவிட்டால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.
பாடல்களுக்கு விமர்சனம் வந்தது போலவே, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டர்கள் வெளிவந்தபோது நெற்றியில் பொட்டுக்குப் பதிலாக நாமம் போட்டப்பட்டிருக்கிறது. மணிரத்னம் வரலாற்றை மாற்றுகிறார் என்ற கூக்குரல்கள் கேட்டன. பிராமணரான அவர் திட்டமிட்டே இதனைச் செய்கிறார்கள் என்றும் விமர்சனம் எழுந்தது. பின்னர் படத் தயாரிப்புத் தரப்பு, அது நாமம் அல்ல, நீண்ட திலகம் என்று சொன்னபோது, சோழர் காலத்திலேயே தாமும் வாழ்ந்தவர்கள் போல, அக்காலத்தில் அப்படித் திலகம் வைக்கும் பழக்கம் இருந்ததில்லை என்று வாதிடவும் தயங்கவில்லை இவர்கள்.
இந்த வரிசையில் பிந்திய சர்ச்சையாக, தமிழ்ப் பெண்களான குந்தவை, நந்தினி ஆகிய பாத்திரங்களில் கறுப்பு நிற நடிகைகளைப் பயன்படுத்தாது திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரை பயன்படுத்தியதைக் கண்டிக்கும் காணொளிப் பதிவையும் அண்மையில் காணக் கிடைத்தது. அந்த வீடியோவில், ஈழத் தமிழர்கள் கதையோடு பயணிக்கும் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தில் ஈழப் பெண்களாக நந்திதா தாஸ், ஈஸ்வரி ஆகிய நடிகைகளைப் பயன்படுத்திய மணிரத்னம், பொன்னியின் செல்வனில் குந்தவை, நந்தினிக்கு வெள்ளை வெளேர் என்று இருக்கும் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரையும் நடிக்க வைத்தது racism என்றே ஒரு பெண் ஒரே போடாகப் போட்டு விட்டார்.
படம் வெளிவரும் முன்னர் இத்தனை விமர்சனங்கள் இருந்த நிலையில் தற்போது படம் வெளிவந்து திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் விமர்சனம் என்ற பெயரில் திரும்பவும் ஆளாளுக்கு விமர்சனங்களால் வலைப் பக்கங்கள், Facebook, Whatsapp என அனைத்தையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இனியும் பேசுவார்கள். அதிலும் குறிப்பாக எப்போதும் சர்ச்சையாகப் பேசி வரும் பாரிசாலன், ரங்கராஜ் பாண்டே போன்றவர்களும் இந்தப் படத்தையும் தமது பேசுபொருளாக மாற்றத் தவறவில்லை. “பாலத்தில் செல்லும்போது ஆழ்வார்க்கடியான், ஈட்டி தன்னை உரசிக்கொண்டு செல்லும் போது தமிழ்ப் படத்தில் “ஐயோ” என்றும் ஏனைய நான்கு படங்களிலும் “நாராயணா” என்று அலறுகிறார். இது பெரும் வரலாற்றுத் திரிபு” என்று ரங்கராஜ் பாண்டே முட்டையில் மயிர் புடுங்குவது அதனையே காட்டுகிறது.
தமிழர்களில் பலரைப் பொறுத்தவரை சோழர் குல வரலாறு என்பது சோழ அரசர்களின் வரலாறு இல்லை. அது அவர்களின் வரலாறு. அப்படித்தான் அவர்களில் பலர் நம்புகிறார்கள். அவர்களுள் தங்களை ஆண்ட பரம்பரையாக கருதும் மனநிலையில் இன்றும் பலர் இருப்பதும், தம்மை முன்னிலைப்படுத்த நதிமூலம், ரிஷிமூலம் தேடி தங்களை ஏதோ ஒரு பிரசித்தி பெற்ற குலத்துடன் இணைக்கும் முனைப்பிலேயே இவ்வாறானவர்கள் இருக்கிறார்கள். இதனையே சில மாதங்களுக்கு முன்னர் வந்தியத் தேவன் தனது சாதியைச் சேர்ந்தவர் என்று சிலரும், பழுவேட்டரையர்கள் பரம்பரையில் வந்தவர்கள் தாங்கள்தான் என்று சிலர் கொடி பிடித்ததும் வெளிக்காட்டி நின்றது. ஈழத்தில் பிறந்த தமிழர்களில் பலருக்கும் தாம் சோழர் வழிவந்தவர்கள் என்ற நம்பிக்கை மிகவும் பலமாகவே இருக்கிறது.
அவர்களைப் பொறுத்தவரை, இந்த நாவல் ராஜராஜ சோழனின் வரலாற்றைக் கூறும் முக்கிய ஆவணம் மட்டுமல்ல, தமிழர்களான தமது வரலாற்றுப் பெருமையைப் பேசும் ஆவணம். அவர்கள் அப்படித்தான் இதனைப் பார்க்கிறார்கள். உண்மையில் இது கிடைத்த சில ஆதாரங்களை வைத்து இப்படி நடந்திருக்கக்கூடும் என்று கற்பனை செய்யப்பட்டு, கதைக்குச் சுவை சேர்க்க சில கற்பனைப் பாத்திரங்களையும் இணைத்து எழுதப்பட்ட கற்பனை நாவல் என்பதை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. இதில் சோழ அரச குடும்பத்தைப் பற்றியே பேசப்படுகிறதே அன்றி தமிழரின் வாழ்வியல் பேசப்படவில்லை என்பதே உண்மை.
இவையெல்லாம் ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால் முதலில் எம்ஜிஆர், பின்னர் கமலஹாசன் என்போர் முயன்று முடியாமல் போன ஒன்றை மணிரத்னம் செய்து முடித்தது ஒரு சாதனைதான். அதேபோல, மிகவும் தைரியமாக 48 வயது மற்றும் 39 வயதுடைய பெண்களைக் கதாநாயகிகளாக நடிக்க வைத்த மணிரத்னத்தின் துணிச்சலும் பாராட்டப்படக் கூடியதே.
எழுதுவது : வீமன் கனடா