“ஐரோப்பிய நீதிமன்றத்திடமிருந்து எங்கள் இறையாண்மையை மீட்டெடுப்போம்,” என்கிறார் புதிய பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர்.
பிரிட்டிஷ் கொன்சர்வடிவ் கட்சியின் அங்கத்தினர்களுக்கான வருடாந்திர மாநாடு பெர்மிங்ஹாம் நகரில் நடந்துகொண்டிருக்கிறது. புதியதாகப் பதவியேற்ற லிஸ் டுருஸ் அரசின் அமைச்சர்கள் முதல் முதலாகத் தமது கட்சியினரை எதிர்கொள்ளும் நிகழ்வு இதுவாகும். அரசு சமர்ப்பித்த இடைக்கால வரசு செலவுத் திட்டத்தில் வெளியிட்ட வரிக் குறைப்பு – அதைத் திரும்பப் பெற்றமைக்காக வெவ்வேறு கோணங்களிலான விமர்சனங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் டுருஸ் – உம் அவரது சகாக்களும். நாட்டின் புதிய உள்துறை அமைச்சரும், குடிவரவுத்துறை அமைச்சருமான சுவேலா பிரேவர்மான் அவ்விடயத்தில் தமது அரசு எடுக்கவிருக்கும் நகர்வுகளைப் பற்றி விபரித்தார்.
ஸ்ராஸ்போர்கிலிருக்கும் [Strasbourg] ஐரோப்பிய மனித உரிமைகள் பாதுகாப்புக்கான நீதிமன்றத்திடமிருந்து ஐக்கிய ராச்சியத்தின் அகதிகள், குடிவரவு ஆகியவை பற்றிய முடிவுகளை எடுக்கும் இறையாண்மையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பிரேவர்மான் குறிப்பிட்டதை கட்சியின் அங்கத்துவர்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். ஐக்கிய ராச்சியத்துக்குள் அனுமதியின்றி நுழைபவர்கள் அகதிகளாக விண்ணப்பிப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று பதவியிறங்கிய போரிஸ் ஜோன்சன் அரசு ஏற்கனவே அறிவித்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது தொடரும் என்றார் அவர்.
ஐக்கிய ராச்சிய அரசு மேற்குறிப்பிட்ட அகதிகள் விண்ணப்பதாரர்களை ஒருவழிப் பயணச்சீட்டுடன் ருவாண்டாவுக்கு அனுப்ப ஒப்பந்தம் செய்திருக்கிறது. அதை முதன் முதலாகச் செயற்படுத்த முற்பட்டபோது ஐரோப்பிய மனித உரிமைகள் பாதுகாப்பு நீதிமன்றத்தின் குறுக்கீட்டால் தடைப்பட்டது. அதிலிருக்கும் சட்ட, ஒழுங்குப் பிரச்சினைகளை நீக்கியபின் அறிவிக்கப்பட்டபடி அடுத்த வருடத்திலிருந்து அதைச் செயற்படுத்தவிருப்பதாக பிரேவர்மான் சூழுரைத்தார்.
“எங்கள் நாட்டின் எல்லைகளுக்குள்ளேயான முடிவுகளை எடுக்கும் இறையாண்மையை இன்னொரு நாட்டினர் எடுக்க அனுமதிக்க முடியாது,” என்று உறுதியான குரலில் குறிப்பிட்ட அவர் அதை நிறைவேற்ற அரசு என்ன செய்யப்போகிறது என்பதை விளக்கவில்லை. குறிப்பிட்ட அகதிகளை வரவேற்று ருவாண்டாவில் வாழும் வசதிகளைச் செய்துகொடுப்பதற்காக ஐக்கிய ராச்சியம் ஏற்கனவே சுமார் 136 மில்லியன் டொலர்களை ருவாண்டா அரசுக்கு வழங்கியிருக்கிறது.
பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயிருக்கும் கால்வாய் மூலமாக நாட்டுக்குள் நுழைந்து அகதிகளாகப் பதிவுசெய்பவர்களை நிறுத்தவேண்டும் என்பதே அரசின் குறியாகும். பெரும் கப்பல் போக்குவரத்துப் பாதையான அந்தக் கால்வாயின் மூலம் கடந்த வருடம் சுமார் 28,000 பேரும் இவ்வருடம் இதுவரை சுமார் 35,500 பேரும் பிரிட்டனுக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்