பிராக் [Prague] நகரில் கூடும் ஐரோப்பிய கலந்தாய்வு மாநாட்டில் கூடியிருக்கும் 44 ஐரோப்பிய கிரகங்கள்!
தென்கிழக்கு ஐரோப்பாவில் வெடித்திருக்கும் போர்க்காலத்தில் ஐரோப்பாவிலிருக்கும் நாடுகள் தமது அரசியல், பாரம்பரிய வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு குறிப்பிட்ட சில குறிக்கோள்களை முன்வைத்துச் செயல்படவேண்டும் என்பது எதிர்பார்ப்பு. இந்த மாநாட்டுக்கான கருவை இவ்வருடம் மே மாதத்தில் விதைத்தவர் பிரெஞ்ச் ஜனாதிபதி மக்ரோன் ஆகும்.
“ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கங்களை விடப் பரந்த குறிக்கோள்களுடன் ஐரோப்பாவை ஒரேயொரு அரசியல் கண்ணோட்டத்தில் ஒழுங்கமைப்பது சாத்தியமாகுமா?” என்ற கேள்வியை அவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் எழுப்பியபோது அது வரவேற்பைப் பெறாததுடன் பிரென்ச் தலைவரின் வெறும் கற்பனை கோலமே என்றும் விமர்சிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை மட்டுமன்றி இணையும் விருப்பமிருந்தும் அதற்குள் சேராமலிருப்பவர்கள், இணைய மறுப்பவர்கள், அதற்கு எதிரான ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து ஒரே அரசியல் பாதையில் சிந்திக்கவைக்க முடியுமா என்பதே பிரெஞ்ச் தலைவரின் எண்ணமாகும். படிப்படியாக ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளும், மற்றைய ஐரோப்பிய நாடுகளிடையேயும் தனது எண்ணத்துக்கு ஆதரவு தேடிக்கொண்டார் மக்ரோன்.
அதன் விளைவாக ஒக்டோபர் 6 – 7 திகதிகளில் தற்சமயம் ஐரோப்பிய ஒன்றியத் தலைமை நாடாக இருக்கும் செக் குடியரசின் அரண்மனையில் 44 நாடுகள் கூடியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அவ்வமைப்பில் சேர விண்ணப்பித்திருக்கும் நாடுகள் தவிர, விலகிய ஐக்கிய ராச்சியம், சேராமல் விலகி நிற்கும் நோர்வே, சுவிஸ் மற்றும் செர்பியா, ஜியோர்ஜியா, ஆசார்பைஜான், ஆர்மீனியா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய கலந்தாய்வு மாநாட்டில் European Political Community)கூடியிருக்கின்றன.
தமக்குள் எதிரிகளாக இருக்கும் நாடுகளான கொசோவோ – செர்பியா , ஆர்மீனியா – ஆசார்பைஜான், மற்றும் துருக்கி – சைப்ரஸ் – கிரீஸ் ஆகிய நாடுகளும் மா நாட்டிற்குத் தமது பிரதிநிதிகளை அனுப்பியிருக்கின்றன. ரஷ்யா – உக்ரேன் போரில் வெவ்வேறு தரப்பாருக்கு வித்தியாசமான விதமான ஆதரவுகளைக் கொடுக்கும் நாடுகள் அங்கே கூடியிருக்கின்றன. மாநாட்டுக்கான பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட நிர்வாகிகளின் செயற்பாடு இருக்காது என்று கூடியிருக்கும் நாடுகளுக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
பல கோணங்களிலும் திரும்பியிருக்கும் கிரகங்களைப் போன்ற நாடுகள் அங்கே பங்குபற்றுவதால் எல்லோரும் ஒன்றாக மட்டும் சந்தித்து ஒரே விதமான முடிவுகளை எடுக்கும் சாத்தியமில்லை என்பதால் சிறு சிறு குழுக்களாகவே சந்திப்புகள், பேச்சுவார்த்தைகள் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு, அமைதி பேணல், பொருளாதாரம், எரிசக்தி ஆகிய விடயங்களைக் குறித்தே இந்த மாநாட்டில் பங்குபற்றும் நாட்டினர் கலந்தாலோசிக்கவிருக்கிறார்கள்.
ஐரோப்பிய கலாந்தாய்வு மாநாடு முடியும்போது அவர்களெல்லோரும் சேர்ந்து அடுத்த கட்டத்துக்கான முடிவாக எதை எடுத்திருப்பார்கள் என்பது எவருக்கும் தெரியாது. கடைசிக்கட்ட நிகழ்வுகளின் பின்னரே மாநாட்டின் எண்ணம் ஏதாவது பலனளித்திருக்கிறதா என்பதை அறிய முடியும்.
சாள்ஸ் ஜெ. போமன்