ரஷ்ய ஹெலிகொப்டர்களை வாங்க மறுத்து, அதற்காகக் கொடுத்த முன்பணத்தை திருப்பித்தரக் கோருகிறார் பிலிப்பைன்ஸ் ஜ்னாதிபதி.
பிலிப்பைன்ஸ் அரசு தமது இராணுவத்துக்காக ரஷ்யாவிடமிருந்து ஹெலிகொப்டர்களைக் [Mi-17] கொள்வனவு செய்ய நவம்பர் 2021 இல் முன்பணம் கொடுத்தது. உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பால் ரஷ்யா மீது போடப்பட்ட தடைகளைக் கருதி அன்றைய ஜனாதிபதி டுவார்ட்டே அந்த ஹெலிகொப்டர் கொள்வனவை வேண்டாமென்று அறிவித்திருந்தார். அதற்காகப் பிலிப்பைன்ஸ் அரசு கொடுத்திருந்த முன்பண மில்லியன்களில் ஒரு பகுதியைத் [32 மில்லியன் டொலர்கள்] திருப்பித் தரவேண்டும் என்று தற்போதைய ஜனாதிபதி பெர்டினெண்ட் மார்க்கஸ் ஜூனியர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
16 Mi-17 ஹெலிகொப்டர்களை இரண்டு வருடங்களில் பிலிப்பைன்ஸுக்குக் கொடுப்பதாக உறுதிகூறியிருந்த ரஷ்யா தாம் அவற்றைத் தயாரித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்து மீதிப்பணத்தைப் பற்றியும் கோரியிருந்தது. அதற்கு உத்தியோகபூர்வமான பதிலாகவே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அவை தேவையில்லை என்று குறிப்பிட்டுத் தாம் போலந்தில் தயாரிக்கப்படும் Boeing CH-47 Chinook ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்ய முடிவெடுத்திருப்பதாக ரஷ்யாவுக்கு அறிவித்திருக்கிறார்.
நவீனப்படுத்தப்பட்டு வரும் பிலிப்பைன்ஸ் இராணுவம் தனது பிராந்தியத்தில் சீனா அத்துமீறி நுழைவதாகக் குற்றஞ்சாட்டி வந்திருக்கிறது. அப்பிராந்தியத்தில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து பாதுகாப்புக்காகக் கூட்டுச் சேர்ந்திருக்கிறது.Boeing CH-47 Chinook ஹெலிகொப்டர்கள் தமது பாதுகாப்புக்குப் பாவிப்பதற்க்குப் பொருத்தமானவை என்கிறார் மார்க்கஸ் ஜூனியர். அவை அமெரிக்காவின் Boeing Vertol நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்