சிறிய செயற்கைக்கோள்களை விண்வெளிக்கனுப்புவதில் சக்கைப்போடு போடும் இந்தியாவின் இஸ்ரோ!
இஸ்ரோ என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஞாயிறன்று 36 சிறிய செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. ஆந்திரப்பிரதேசத்துக்கு அருகேயிருக்கும் சிறிஹரிஹோத்தா தீவிலிருந்து அவை ஒரே விண்வெளிக்கலத்தில் வைத்து விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்தத் திட்டம் முழு வெற்றியடைந்திருப்பதாகவும் விண்வெளியில் அந்தக் கோள்கள் சரியான இடத்தில் சேர்க்கப்பட்டு அவற்றுடனான தொலைத்தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் வெற்றியடைந்திருப்பதாக இஸ்ரோவின் தலைமை நிர்வாகி எஸ்.சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் இந்த விடயத்தில் வெற்றியடைந்திருக்கும் அதே சமயம் விண்வெளியில் அதே வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த ரஷ்யாவின் நிலைமை பலவீனமடைந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. வழக்கமாக ரஷ்யாவின் சோயுஸ் விண்கலங்களே அம்முயற்சிக்காகப் பாவிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்தியாவின் சக்திமிக்க புதிய தயாரிப்பான LVM3 விண்கலம் மூலம் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
விண்வெளியில் செயற்கைக்கோள்களைக் கொண்டுசெல்லும் வியாபாரம் லண்டனில் செயற்படும் OneWeb என்ற நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. அது பிரிட்டிஷ் அரசு, பிரான்ஸின் யூடெஸ்சாட், இந்திய நிறுவனமான பார்தி குளொபல் ஆகியவற்றினால் நடத்தப்படும் நிறுவனமாகும்.
கஸக்ஸ்தானிலிருக்கும் விண்கலங்களை வான்வெளிக்கனுப்பும் மைதானங்களிலேயே உலகிலேயே மிகப்பெரிய Baikonur Cosmodrome இலிருந்தே வண் வெப் நிறுவனம் இஸ்ரோவின் இயக்கத்துடன் இதுவரை சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதில் ஈடுபட்டு வந்தது. ஞாயிறன்று சிறீஹரிகோத்தாவிலிருந்து விண்வெளிக்கு விட்பபட்ட 36 செயற்கைக்கோள்கள் மார்ச் மாதத்தில் பாய்கொனூர் கொஸ்மோடிரொமிலிருந்து அனுப்பப்படத் திட்டமிடப்பட்டிருந்தன. அந்தச் செயற்கைக் கோள்கள் இராணுவத் தேவைகளுக்காகப் பாவிக்கப்படலாகாது என்று ஒன் வெப் உறுதிகூறவேண்டும் என்று ரஷ்யா கோரியதால் அது நிறுத்தப்பட்டிருந்தது.
இஸ்ரோவின் இந்த வெற்றியின் பின்னர் இதேபோன்று தொடர்ந்தும் ஒன் வெப் மட்டுமன்றி மற்றைய நிறுவனங்களுக்காகவும் செயற்கைக்கோள்களை அனுப்பும் சந்தர்ப்பம் கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதன் மூலம் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் ரஷ்யாவின் Roscosmos உடன் வியாபார ரீதியில் போட்டியிட்டு செயற்கைக் கோள்களை அனுப்பும் வியாபாரத்தில் சர்வதேச ரீதியில் பலமாக வளரமுடியும் என்று நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்