சனிக்கிழமை மொகடிஷுவில் வெடித்த இரட்டைக் குண்டுகள், இறந்தோர் தொகை 100 க்கும் அதிகம்.
சனிக்கிழமையன்று சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் வெடிகுண்டுகள் தாங்கிய இரண்டு கார்கள் அடுத்தடுத்து வெடித்தன. நகரின் முக்கியமான வர்த்தக வீதிகளைக் கொண்ட சந்தியொன்றில் வெடித்த அந்தக் குண்டுகளால் தாக்கப்பட்டு இறந்தோர் தொகை 100 க்கும் அதிகம், காயமடைந்தவர்கள் 300 பேருக்கும் அதிகமானோர்.
இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று நாட்டின் ஜனாதிபதி ஹஸன் ஷேக் மகமூத் குறிப்பிட்டார். நாட்டில் செயற்பட்டுவரும் தீவிரவாதக் குழுவான அல் ஷபாப் இயக்கத்தினரை அவர் குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்களாகச் சுட்டிக் காட்டினார். அந்த இயக்கத்தை அழித்தொழிப்பது தமது அரசின் முக்கிய குறிக்கோள் என்று அவர் சூளுரைத்தார்.
ஞாயிறன்று காலையில் தொடர்ந்து மீட்புப் பணிகளில் பல நூறு பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜனாதிபதி உடனடியாகக் குண்டு வெடித்த இடத்துக்கு விஜயம் செய்து நிலைமையைப் பார்வையிட்டார். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பலர் குண்டால் தாக்கப்பட்டு இறந்திருப்பதாகப் நகரின் பொலீஸ் காரியாலயம் குறிப்பிட்டிருக்கிறது. இறந்தவர்களில் ஒருவர் பிரபல பத்திரிகையாளர் முஹம்மது இஸ்ஸ கோனா ஆகும்.
முதலாவது குண்டு மொகடிஷுவிலிருக்கும் கல்வி அமைச்சின் முக்கிய கட்டடத்தின் சுவரையடுத்து வெடித்தது. அதைக் கண்டு அங்கே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகப் பலர் அதை நெருங்கியபோது இரண்டாவது குண்டு வெடித்ததாகச் சாட்சிகள் தெரிவித்திருக்கிறார்கள். அவசரகாலச் சிகிச்சைக்குக் காயப்பட்டவர்களைக் கொண்டுசெல்ல வந்திருந்த அம்புலன்ஸ் ஒன்றும் இரண்டாவது குண்டுவெடிப்பால் தாக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ.போமன்