பல சினிமாக்கள், நாவல்களுக்குக் காரணகர்த்தாவான சார்ள்ஸ் சோப்ராஜ் விடுதலை செய்யப்பட்டான்.
1970 களில் ஆசிய நாடுகளுக்கு விஜயம் செய்த பல வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாகக் கொன்ற சார்ள்ஸ் சோப்ராஜ் நேபாளச் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறான். 20 வருடங்கள் சிறையில் கழித்த அவன் டிசம்பர் 23ம் திகதி விடுதலை செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் பிரான்ஸுக்கு நாடுகடத்தப்படவிருக்கிறான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியத் தந்தைக்கும், வியட்நாம் தாய்க்கும் மகனாக அவன் சைகொன் நகரில் பிறந்தான். தாயார் பின்பு ஒரு பிரெஞ்ச்சுக்காரரைத் திருமணம் செய்துகொண்டார். ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் போதை மருந்துகள் பாவிப்பவர்களை நட்பாக்கிக்கொள்வது சோப்ராஜின் வழக்கம். தன்னை ஒரு இரத்தின வியாபாரியாக அவர்களிடம் அறிமுகம் செய்துகொள்வான். அவர்களுடன் பழகி மயக்கிவிட்டுக் கொலை செய்தான். 1975 இல் ஒரு அமெரிக்கப் பெண்ணின் சடலம் நீச்சலுடையில் கண்டெடுக்கப்பட்டது. அவளைக் கொலை செய்வதற்காக சோப்ராஜ் தேடப்பட்டான். அதனால் அவன் பிகினிக் கொலைகாரன் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டான்.
மேலும் சுமார் 20 கொலைகளில் அவன் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டது. 1976 இல் இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட அவனுக்கு 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறையிலிருந்துகொண்டு சிறைக்காவலர்களுக்குப் போதை மருந்துகொடுத்து மயக்கிவிட்டுத் தப்பியோடிய அவன் கோவாவில் கைதுசெய்யப்பட்டுச் சிறைக்கனுப்பப்பட்டான். விடுதலை பெற்றபின் பிரான்ஸில் சென்று வாழ்ந்த அவன் பத்திரிகையாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தனது கொலை விபரங்களை வெளியிட்டான்.
மீண்டும் 2003 இல் நேபாளத்துக்குப் பயணமானான் அவன். அங்கே 1975 இல் அவன் கொலைகள் இரண்டைச் செய்ததாக விசாரித்து ஆயுள் தண்டனை பெற்றான். அக்கொலைகளைத் தான் செய்யவில்லையென்று அவன் சாதித்து வருகிறான். தாய்லாந்திலும் அவன் கொலைகள் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
அவனது வாழ்க்கை பற்றிய கதை “The Serpent” என்ற பெயரில் பிரிட்டிஷ் சினிமாத் தொடராக வெளியாகி நெட்பிளிக்ஸ் இல் காணக்கிடைக்கிறது. அதைத் தவிர “மைன் அவுர் சார்ள்ஸ்[ஹிந்தி] ”, “Sobhraj– Or How To Make Friends With A Serial Killer”, சோப்ராஜ் [மலையாளம்] ஆகியவையும் அவனது கொள்ளை, கொலைகள் பற்றி விபரிப்பவையாகும். 1970 களில் பிரபலமான அவனது பெயரை வைத்துப் புனையப்பட்ட பல சினிமாக்கள், நாவல்களும் வெளிவந்திருக்கின்றன.
பிரெஞ்ச்க் குடிமகனான சோப்ராஜுக்கு இருதய அறுவைச் சிகிச்சை தேவையென்று போடப்பட்ட விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டே மனிதாபிமான காரணத்துக்காக அவன் விடுதலை செய்யப்பட்டிருக்கிறான்.
சாள்ஸ் ஜெ. போமன்