பாரிஸில் குர்தீஷ் கலாச்சார மையமொன்றுக்கருகே துப்பாக்கிச் சூடு, மூவர் மரணம்.
பாரிஸ் நகரின் பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தியதற்காக ஒருவன் கைது செய்யப்பட்டிருப்பதாகப் பொலீசார் தெரிவிக்கின்றனர். குர்தீஷ் கலாச்சார மையம் ஒன்றை அடுத்தே அது நடந்திருப்பதால் அப்பகுதியெங்குமுள்ள மக்கள் பீதிக்குள்ளாகியிருக்கின்றனர். குர்தீஷ் மக்களுக்குத் தொடர்புடைய இடங்களில் பொலீசார் தமது பாதுகாப்பை அதிகப்படுத்தியிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
துப்பாக்கிச்சூடுகளை நடத்தியவன் ஒரு 69 வயதானவன் என்றும் அவன் சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் வெளிநாட்டவர்களைக் கத்தியால் குத்தியதற்காகக் கைதுசெய்யப்பட்டுச் சிறைக்கனுப்பப்பட்டவென்றும் பிரெஞ்ச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவன் இம்மாதம் 12 ம் திகதிதான் முன்னர் செய்த குற்றத்துக்காகச் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்பு வெளியே வந்தவனென்றும் அந்த ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
வெளிநாட்டு அகதிகள் முகாமையடுத்தே முன்னர் அவன் கத்திக்குத்து நடத்தியிருக்கிறான். தற்போதைய அவனது குற்றம் கொலை என்று தலைப்பில் விசாரிக்கப்படுகிறது. காரணங்கள் இதுவரை தெரியவில்லை. துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளானவர்களில் மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கிறார். வேறு இருவரும் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்