ஓட்டப்பந்தய வீரர் உசெய்ன் போல்ட்டின் சொத்தில் பெரும்பாகத்தை யாரோ கையாடிவிட்டார்கள்.
2017 ம் ஆண்டு தனது ஓட்டப்பந்தயக் காலணிகளுக்கு ஓய்வுகொடுத்துவிட்ட சாதனையாளர் உசெய்ன் போல்ட் தனது வெற்றிகளாலும், விளம்பர வருமானங்களாலும் வாழ்நாள் முழுவதும் சொகுசாக வாழக்கூடிய பணக்காரரானார். அவரது வங்கிக்கணக்கிலிருந்து 12,7 மில்லியன் டொலர்களைக் கண்ணுக்குத் தெரியாத யாரோ கையாடிவிட்டிருக்கிறார்கள். மிச்சமாக அவரிடமிருப்பது வெறும் 12,000 டொலர்கள் மட்டுமே.
ஜமேக்காவின் விளையாட்டுச் சரித்திரத்தில் மிகப் பெரிய ஓட்டப்பந்த நட்சத்திரங்களில் முக்கியமானவர் உசெய்ன் போல்ட் ஆகும். ஓட்டப்பந்தயங்களில் எட்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் மேலும் பதினொரு உலகப் போட்டிகளில் 11 தங்கப் பதக்கங்கள் பெற்று, 100 மீற்றர், 200 மீட்டர் இரண்டிலும் உலக சாதனைகளை வைத்திருப்பவர் என, அவர் தனது பெயரை வரலாற்றுப் புத்தகங்களில் பதித்திருக்கிறார்.
ஜமேக்காவில் மேலும் பல வயதானவர்களும், அமைச்சுகள், திணைக்களங்களின் கணக்குகளிலிருந்தும் பெரிய தொகைகள் களவாடப்பட்டிருக்கின்றன. மொத்தமாகக் களவாடப்பட்டிருக்கும் தொகை எவ்வளவென்று இன்னும் தெரியவில்லை. வங்கிக்கணக்குகளிலிருந்து இத்திருட்டுகள் சுமார் 13 வருடங்களாக நடந்துகொண்டிருந்திருக்கின்றன என்பதும் இவ்வாரத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. உசேன் போல்ட்டின் வக்கீல்கள் போல்ட் முதலீடு செய்திருந்த நிறுவனத்துக்கு ஒரு வாரம் தவணை கொடுத்து அதற்குள் காணாமல் போன தொகையைத் திருப்பும்படி கோரியிருக்கிறார்கள்.
ஜமேக்காவின் அரசு அமெரிக்காவின் குற்றவியல் துறையினருடன் தொடர்பு கொண்டு தமக்கு உதவும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்