பூமியதிர்ச்சியால், போரால் பாதிக்கப்பட்ட சிரியாவின் பகுதிகளில் மிகவும் மோசமான அழிவுகள்.
திங்களன்று அதிகாலையில் துருக்கியின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் சிரிய எல்லையில் உண்டாகிய பூமியதிர்ச்சியின் தாக்குதலால் கணிக்கப்பட்டது போலவே ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். துருக்கியில் ஏற்பட்டிருக்கும் அழிவுகள், உயிரிழப்புகள் பற்றியே பெருமளவில் ஊடகங்கள் பிரஸ்தாபிக்கின்றன. துருக்கியின் எல்லையை அடுத்திருக்கும் சிரியப் பகுதிகளிலும் பூமியதிர்ச்சி மோசமான விளைவுகளை உண்டாக்கியிருக்கின்றது.
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகப் போரால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் சிரியாவின் பிரதேசங்களில் பூமியதிர்ச்சி அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விட, பாதிக்கப்பட்டிருந்த பகுதியின் மீது மேலும் பலமான அழிவை உண்டாக்கியிருக்கிறது எனலாம். சிரிய அரசுக்கு எதிராகப் போராடிவரும் குழுக்களின் கையிலிருக்கும் பிராந்தியங்களில் சிரிய அரசினால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 4 மில்லியன் பேர் முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
அகதிகள் முகாம்களில் மிகவும் குறைந்த வசதிகளுடன் வாழ்ந்து வருபவர்களின் பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து நொருங்கியதால் பலர் உள்ளே மாட்டிக்கொண்டிருப்பதாக அங்கே செயற்படும் மனிதாபிமான உதவி அமைப்பினர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அரசுக்கெதிரானவர்களின் கைவசமிருக்கும் பகுதிகள் மலைப்பகுதிகளாகும். அவர்களுக்கான தேவைகள் துருக்கியிலிருந்தே அனுப்பப்பட்டு வந்தன. பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் துருக்கியப் பகுதிகளுடன் ஏற்பட்டிருக்கும் தொடர்பு துண்டிப்பால் தற்போதைய நிலைமையில் அங்கே வாழ்பவர்களுக்கு எங்கிருந்தும் உதவி கிடைக்க என்றாகியிருக்கிறது.
சிரியாவிலிருந்து வெளியாகும் பாதிப்புகள், இறப்பு விபரங்கள் பெரும்பாலும் அரசால் ஆளப்படும் பிராந்தியங்களிலிருந்து வெளியாகுபவையாகவே இருக்கும். எனவே இடையே மாட்டிக்கொண்டிருக்கும் பகுதியில் வாழ்பவர்கள் தமக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவி எங்கிருந்து கிடைக்கும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்