துருக்கி, சிரியா அழிவை மூன்று நாட்களுக்கு முன்னரே ஒரு நிலநடுக்கவியலாளர் கணித்திருந்தார்.
நிலநடுக்கங்களை ஆராயும் நெதர்லாந்தைச் சேர்ந்த நிபுணரொருவர் துருக்கி, சிரியா பகுதிகளில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியை அது நடக்க மூன்று நாட்களுக்கு முன்னரே கணித்து டுவீட்டரில் எச்சரித்திருந்தார். அவ்வெச்சரிக்கையில் அது எங்கே நடக்குமென்றும் சரியான இடத்தைக் கணித்திருந்தார்.
“விரைவில் அந்த இடத்தில் 7.5 அளவிலான பூமியதிர்ச்சி ஏற்படும்,” என்று பூகம்பம் பெப்ரவரி 6 ம் திகதி நடந்த இடத்தின் படத்துடன் பெப்ரவரி 3 ம் திகதி டுவீட்டியிருந்தார் பிரான்க் ஹூகர்பீட்ஸ் என்ற அந்தப் புவியியல் வல்லுனர். பூகம்பம் நடந்தவுடன் அவரது கணிப்பு பலராலும் பகிரப்பட்டுப் பிரபலமானது. “இப்படியான பூமியதிர்ச்சிகள் நடக்கக் காரணம் பூமிக்கிரகத்தின் வடிவமைப்பாகும். அதனுள் நடக்கும் மாறுதல்களால் இவ்விளைவு இன்றோ நாளையோ ஏற்படுமென்பதைக் கணித்துவிடலாம்,” என்கிறார் அவர்.
ஏற்பட்ட பூமியதிர்ச்சியை அடுத்து அப்பகுதியில் தொடரும் பிரதிபலிப்பு அதிர்வுகளைப் பற்றி ஹூகர்பீட்ஸ், “துருக்கி, சிரியாப் பகுதியில் ஏற்பட்ட அந்த நில நடுக்கமானது புவியினுள்ளேயிருக்கும் ஓட்டுப்பகுதிகளில் அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான் தொடரும் பிரதிபலிப்புகள் அந்தப் பிராந்தியத்தின் பல பகுதிகளிலும் உணரக்கூடியதாக இருக்கிறது,” என்று விளக்கியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்