பாகிஸ்தான் – தப்பிப் பிழைக்குமா புதிய அரசாங்கம்?
எழுதுவது: சுவிசிலிருந்து சண் தவராஜா
பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் பாகிஸ்தானின் 24ஆவது தலைமை அமைச்சராக சபாஸ் ஷெரிப் பதவியேற்றுள்ளார். பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றிராத போதிலும், தனது அரசியல் போட்டியாளரான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவைப் பெற்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி ஆட்சியை அமைத்திருக்கிறது. முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் ஏற்கனவே 2022 ஏப்ரல் முதல் 2023 ஓகஸ்ட் வரை தலைமை அமைச்சர் பதவியை வகித்த சபாஸ் ஷெரிப் மார்ச் 3ஆம் திகதி தலைமை அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். 336 அங்கத்தவர்களைக் கொண்ட தேசிய நாடாளுமன்றத்தில் 201 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று தனது பெரும்பான்மையை அவர் நிரூபித்திருந்தார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் மேனாள் தலைமை அமைச்சர் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்களே அதிகளவில் வெற்றி பெற்றிருந்தமை தெரிந்ததே. ஆனாலும் அவர்களால் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில், தலைமை அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் நோக்குடன் மார்ச் 3ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய போது சபையில் பெருமளவு கூச்சலும் குழப்பமும் நிறைந்திருந்தது. மோசடிகள் மூலமே சபாஸ் ஷெரிப் ஆட்சிக்கு வருவதாக கோசமெழுப்பிய சுயேட்சை வேட்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது தலைவர் இம்ரான் கானின் நிழல்படங்களையும்; தாங்கியிருந்தனர். அவர்களின் ஆக்கிரோசமான கோசங்களுக்கு மத்தியிலேயே புதிய அரசுத் தலைவர் தெரிவு நடைபெற்றது.
தலைமை அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட சபாஸ் ஷெரிப் ஊழலுக்கு எதிராகப் போராடப் போவதாக அறிவித்துக் கொண்டார். ஆனால் அவரின் மூத்த சகோதரனும், மூன்று முறை பாகிஸ்தான் தலைமை அமைச்சராகப் பதவி வகித்தவரும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இங்கிலாந்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியவருமான நவாஸ் ஷெரிப் நேரில் வருகை தந்து அவரைப் பாராட்டியதைப் பார்த்த போதில் அவரது பிரகடனம் பாரிய முரண் நிறைந்ததாகத் தெரிந்தது.
தெற்காசிய நாடுகளில், குறிப்பாக பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டுக்கும், அரச அதிகார துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத தலைமை அமைச்சர் எவரும் இருந்திருக்கவில்லை எனக் கூறும் அளவிற்கு அந்த நாட்டில் ஊழலும், அரச அதிகார துஸ்பிரயோகமும் தலைவிரித்து ஆடுகின்றது. 77 வருட வரலாறைக் கொண்ட அந்த நாட்டில் இன்றுவரை எந்தவொரு தலைமை அமைச்சரும் தமது பதவிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்த வரலாறும் இல்லை. 77 ஆண்டுகளில் 24 தலைமை அமைச்சர்கள் பதவி வகித்துள்ளார்கள் என்ற தகவலே அந்த நாட்டு ஜனநாயத்தின் இலட்சணத்தை அறியப் போதுமானது.
சபாஸ் ஷெரிப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கம் கூட தனது ஒட்டுமொத்த பதவிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இம்ரான் கான் தலைமையிலான கட்சி ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்ற ஒரேயொரு நோக்குடன் அரசியல் எதிரிகளைக் கொண்ட ஒரு கூட்டை உருவாக்கி அரசாங்கத்தை உருவாக்கிவிட்டால் அது எத்தனை காலத்துக்குத் தாக்குப் பிடிக்கும் என்ற கேள்வி எழுவது இயல்பானதே. மறுபுறம் தாங்களே வெற்றிபெற்றதாகக் கூறிவரும் இம்ரான் கானின் கட்சி புதிய ஆட்சி தொடர்ந்து சுமுகமாகச் செயற்பட அனுமதிக்குமா என்ற கேள்வியும் எழுகின்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் இடம்பெற்ற அமளிதுமளிகளைப் பார்க்கும் போது புதிய அரசாங்கத்துக்கு விசப் பரீட்சை உள்ளதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. தேர்தல் முடிவுகள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்து அவற்றின் முடிவுகள் எதிர்க் கட்சிக்குச் சாதகமாக அமையுமானால் என்னவாகும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியது. அதற்கிடையில் தமது ‘களவாடப்பட்ட வெற்றி’ தொடர்பில் மக்களை அணிதிரட்டி எதிர்க் கட்சி நடத்தவுள்ள போராட்டங்களை புதிய அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பதுவும் அவதானிக்கப்பட வேண்டிய விடயம்.
இம்ரான் கான் தலைமையிலான நீதிக்கான பாகிஸ்தான் இயக்கக் கட்சியின் சார்பில் அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஒமர் அயூப் கான் 92 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். தற்போதைய அரசாங்கத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வகித்துவரும் அவர் அரசுத் தலைவர் தேர்தலின் பின்னர் நடாளுமன்றில் உரையாற்றிய போதில் ஷேக்ஸ்பியரின் மேற்கோளை எடுத்தாண்டார். “இன்றைய பாகிஸ்தானின் ‘சிஸ்டத்தில்’ ஏதோவொன்று அழுகிப் போய் உள்ளது” என அவர் கூறினார். அவரது கூற்று பாகிஸ்தானின் இன்றைய அவல நிலையைப் புரிந்து கொள்ள மாத்திரம் அன்றி அந்த நாட்டு அரசியலின் எதிர்காலத்தையும் புரிந்து கொள்ளப் போதுமானது.
தற்போதைய நிலையில்; பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் ஏனைய சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் அணி ஆட்சியை அமைத்துக் கொண்டதை நினைத்து மகிழலாம். புதிய ஆட்சி அமைந்ததன் பின்னணியில் செயல்பட்ட பாகிஸ்தானின் படைத்துறையும் சந்தோசம் அடையலாம். ஆனால் இந்த மகிழ்ச்சி, சந்தோசம் என்பவை நீடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதையே கள நிலவரம் உணர்த்துகின்றது.
அணுவாயுத வல்லரசான பாகிஸ்தானின் பொருளாதரம் மிகவும் நலிந்த நிலையில் இருந்து வருகின்றது. விலைவாசி விண்ணைத் தொடுகின்றது. நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பில் மேற்குலகம் பலத்த விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்து இருந்தமையையும் பார்க்க முடிகின்றது. தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையிலும் அது தொடர்பான செய்திகளை வெளியிட்டு வரும் மேற்குலக ஊடகங்கள் ‘ஊழல் நிறைந்த தேர்தல்’ என்றே அதனை வர்ணித்து வருவதையும் பார்க்க முடிகின்றது.
போதாதற்கு, சபாஸ் ஷெரிப் தலைமை அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டமைக்கான முதலாவது வாழ்த்துச் செய்தி சீன அதிபரிடம் இருந்து கிடைத்திருக்கின்றது. வல்லரசுகளின் உலகளாவிய போட்டியில் மேற்குலகின் தீவிர எதிரியாகச் சீனா பார்க்கப்படும் நிலையில் சீன அதிபரின் வாழ்த்தானது மேற்குலகிற்கு உவப்பான செய்தியாக இருக்கப் போவதில்லை என்பதே உண்மை.
உள்நாட்டில் எதிர்க் கட்சியின் பலமுனைத் தாக்குதல், பன்னாட்டு அரங்கில் மேற்குலகின் நெருக்கடி என பல தலையிடிகளைச் சமாளித்தாக வேண்டிய நிலையிலேயே சபாஸ் ஷெரிப் இரண்டாவது தடவையாக தலைமை அமைச்சராக ஆகியுள்ளார். அது மாத்திரமன்றி அவருக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள் தம்மை புதிய அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளாமல் வெளியில் இருந்து ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டையே கொண்டுள்ளன. மறுபுறம், வீதியில் மக்களை இறக்கி ‘களவாடப்பட்ட வெற்றி’யைத் தமதாக்கிக் கொள்ள இம்ரான் கான் தலைமையிலான கட்சி தயாராகி வருகின்றது. தன் முன்னே உள்ள அனைத்துச் சாவல்களையும் தாக்குப் பிடித்து பாகிஸ்தான் மக்களுக்கு நல்லாட்சி வழங்கி தனது பதவிக் காலத்தை சபாஸ் ஷெரிப் முழுமையாகப் பூர்த்தி செய்வாரா? அல்லது அவரும் பத்தோடு பதினொன்றாகி வரலாற்றில் தனது பெயரைப் பதிவு செய்வாரா என்பது அடுத்த சில மாதங்களில் தெரிய வரக்கூடும்.
நன்றி: வீரகேசரி