ஸ்லோவாக்கிய அதிபர் கொலை முயற்சி| மேற்குலகின் அரசியல் போக்கு
– எழுதுவது : சுவிசிலிருந்து சண் தவராஜா—
கிழக்கு ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவின் தலைமை அமைச்சர் ரொபர்ட் பிக்கோ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயம் அடைந்துள்ளார். அரச நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு, வெளியே குழுமி இருந்த ஆதரவாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்த வேளை, ஆதரவாளர்கள் குழாமில் இருந்த ஒருவர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு இருந்தார். தலைமை அமைச்சரைக் கொல்லும் நோக்குடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர் செயற்பட்டதாக நம்பப்படுகின்றது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரை உடனடியாகக் கைது செய்த மெய்ப்பாதுகாவலர்கள், தலைமை அமைச்சரை உலங்கு வானூர்தி மூலம் 30 கிலோ மீற்றர் தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மே மாதம் 15ஆம் திகதி ஹானட்லோவா எனும் நகரத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த பிக்கோ தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற போதிலும் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரச பிரதிநிதிகள் மீதான வன்முறைச் சம்பவங்கள் மிக அரிதாகவே நடைபெறும் ஐரோப்பிய மண்ணில் நடைபெற்ற இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய அதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் எதுவாக இருக்கக் கூடும் என்ற விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவத்தில் 71 வயதான யுராஜ் சின்துலா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேனாள் எழுத்தாளரான இவர் காவலாளியாகவும், வாடகை மகிழுந்து ஓட்டுநராகவும் தொழில் புரிபவர் என ஸ்லோவாக்கிய ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இவருக்கும் பிக்கோவுக்கும் இடையில் எது விடயத்தில் பகைமை? இங்குதான் கொலை முயற்சியின் அரசியல் பின்னணி தெரிய வருகின்றது.
ஸ்லோவாக்கியாவின் தலைமை அமைச்சராக பிக்கோ பதவி வகிப்பது இது மூன்றாவது தடவை. 2006 முதல் 2010 வரை, 2012 முதல் 2018 வரை எனப் பதவி வகித்த இவர் கடந்த அக்டோபரில் மூன்றாவது முறையாக தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். சமூக ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் கட்சியைத் தொடங்கிய 59 வயதான பிக்கோ, தேர்தல் பரப்புரைகளின் போது உக்ரைன் போர் தொடர்பில் தெரிவித்த கருத்துகளே அவரது உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியது. தான் வெற்றி பெற்றால் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கப் போவதில்லை எனத் தெரிவித்த பிக்கோ, உக்ரைன் விவகாரத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் எனப் பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றார்.
இவரது போக்கு மேற்குலகின் நிலைப்பாட்டிற்கு எதிரானதாக உள்ளதால் அவர் வேண்டப்படாத ஒரு அரசியல் தலைவராகப் பார்க்கப்படுகின்றார். மேற்குலக ஊடகங்கள் அவரை “புட்டினின் சகா’ என அழைத்து வருவதைப் பார்க்க முடிகிறது. இது தொடர்பில் செய்தி வெளியிட்ட பிரித்தானியாவின் ஸ்கை நியூஸ், “ரஸ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட பிக்கோ மீதான கொலை முயற்சி எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. கொலை செய்ய முயன்றவர் யார் என அறிவது பயனுள்ளது” எனத் தெரிவித்தமை கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் நடைபெற்றுவரும் இன்றைய காலகட்டத்தில் நேட்டோவின் உக்ரன் ஆதரவு நிலைப்பாட்டை ஆதரிப்போருக்கும், அதனை எதிர்ப்போருக்கும் இடையிலான ஒரு விவாதப் பொருளாக, அரசியல்வாதிகளின் சூடேற்றும் பேச்சுகளின் கருவாக பிக்கோவின் நிலைப்பாடு உள்ளது. இந்த விவாதங்களால் தூண்டப்பட்ட நிலையிலேயே பிக்கோ மீதான துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது என நம்பப்படுகின்றது.
ஸ்லோவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் நாட்டின் தலைமை அமைச்சரே நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக உள்ளார். ஆனாலும், அங்கு ஜனாதிபதிப் பதவிக்கும் தனியாகத் தேர்தல் நடைபெறும் ஏற்பாடு உள்ளது. தற்போது ஜனாதிபதியாக உள்ள சுசானா கபுற்றோவா பிக்கோவின் கொள்கைகளுக்கு எதிர்மாறான கருத்தைக் கொண்டவர். மேற்குலக சார்பான அவர் உக்ரைன் போரில் மேற்குலகின் கொள்கைகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கடைப்படித்து வருகின்றார். ஆனால், அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பிக்கோவின் நண்பரான பீற்றர் பெல்லகிரினி எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றுள்ளார். யூன் 14ஆம் திகதி அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு முன்னதாக பிக்கோ மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
கொலையாளியின் உண்மையான பின்னணி தொடர்பிலான தகவல்கள் இன்னமும் முழுதுமாக வெளியாகவில்லை. சிலவேளை, அத்தகைய தகவல்கள் வெளியாக அதிக காலம் செல்லக் கூடும். ஆனால் பிக்கோவைக் கொலை செய்வதன் ஊடாக அவர் எதனைச் சாதிக்க விரும்பினார் என்பதை ஊகிப்பதில் எந்தச் சிரமமும் இல்லை.
அதேவேளை, அவர் போன்றோரை ஆத்திரமூட்டும் வகையில் ஸ்லோவாக்கிய அரசியலில் நிலவும் சூட்டைத் தணிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் இறங்கியுள்ளன. ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகளை அனைத்துக் கட்சிகளும் இணைந்து தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளன. அதேவேளை, நடப்பு ஜனாதிபதியும் அடுத்து ஜனாதிபதியாகப் பதவியேற்க இருப்பவரும் இணைந்து நடத்திய ஊடகர் மகாநாட்டில் மக்களை அமைதி காக்குமாறும் கட்சிகளைப் பொறுப்புடன் பரப்புரைகளில் ஈடுபடுமாறும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்லோவாக்கியா நாட்டைப் பொறுத்தவரை அங்கே உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் நிலைப்பாட்டுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பது கிட்டிய தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், சாமானிய மக்களிடம் இருந்து எப்போதுமே விலகி இருக்கும் மேல்தட்டு வர்க்கம் போருக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே உள்ளது. அந்த மேல்தட்டு வர்க்கச் சிந்தனையின் பிரதிபலிப்பே பிக்கோ மீதான கொலை முயற்சி.
பெரும்பான்மை மக்களின் முடிவை ஏற்றுக் கொள்வது ஜனநாயகத்தின் மிக முக்கியமான கூறுகளுள் ஒன்று. ஆனால், மேற்குலகைப் பொறுத்தவரை இது இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் வேறுபட்டு வந்துள்ளதைப் பார்க்க முடியும். வரலாறு நெடுகிலும் இதற்கு தேவைக்கும் அதிகமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. மேற்குலகைப் பொறுத்தவரை எந்தவொரு விடயமாகினும் அவை எப்போதும் நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.
உலக நாடுகளைப் பொறுத்தவரை உக்ரைன் போரில் அமெரிக்க நிலைப்பாட்டை ஆதரிக்கின்ற நாடுகள் யாவும் நட்பு நாடுகளாகவும், ரஸ்யாவை ஆதரிக்கின்ற அல்லது பேச்சுவார்த்தை மூலம் மோதலுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கின்ற நாடுகள் யாவும் பகை நாடுகளாகவும் பார்க்கப்படுகின்றன. இத்தகைய சிந்தனை சமாதானத்தை நாடுவோரைத் துரோகிகளாகச் சித்தரிக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. இத்தகைய கருத்தியலால் தூண்டப்படும் அதி தீவிரவாதிகள் வன்முறை மூலம் எதிர்க்கருத்துக் கொண்டோரை ஒழித்துக்கட்ட நினைக்கின்றனர். உக்ரைன் போர் ஆரம்பமான நாள் முதலாகவே இத்தகைய போக்கு உலகளாவிய அடிப்படையில் உணரப்பட்டு வருகின்றது.
சோவியத் ஒன்றியத்தின் முன்னைய உறுப்பு நாடுகளாக விளங்கிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இன்னமும் உலகின் ஏனைய நாடுகளைப் போன்று தங்களை ஒரு தேசமாக வலுப்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை. அதற்கான முயற்சியில் அவை பல பத்தாண்டுகளாக ஈடுபட்டு வருகின்ற வேளையில் அங்கிருந்து உருவாகும் பிக்கோ போன்ற வலுவான தலைவர்கள் அகற்றப்பட்டுவிட்டால் அந்த நாடுகளின் தேச உருவாக்கம் இன்னும் பல பத்தாண்டுகள் பின்னோக்கிச் செல்லும் நிலை உருவாகலாம்.
“எந்தவொரு நாடும் அதன் இறைமையைக் கடைப்படிப்பதற்காகத் தண்டிக்கப்படக் கூடாது” என்பது ரொபர்ட் பிக்கோவின் மேற்கோள்களுள் ஒன்று. பிக்கோ கொலை முயற்சி விடயத்தில் அதனையே திருப்பிச் சொல்வதானால் “எந்தவொரு அரசியல் தலைவரும் அவரது கருத்தியல் நிலைப்பாட்டிற்காகக் கொலை செய்யப்படக் கூடாது” எனச் சொல்லலாம்.