குட்டிச் ஸ்லோவாக்கியாவில் மூன்று நாட்கள் ஹங்கேரிக்கோ ஏழு மணிகள், பாப்பரசரின் விஜயம்!

சமீபத்தில் சத்திர சிகிச்சை செய்துகொண்ட பாப்பரசர் ஞாயிறன்று தனது வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பித்தார். ஞாயிறன்று காலையில் ஹங்கேரிக்கு வந்த அவர் அங்கே ஏழு மணித்தியாலங்களை மட்டுமே செலவழித்தார். அதன் பின்னர் பக்கத்திலிருக்கும் குட்டி நாடான ஸ்லோவாக்கியாவுக்குப் புறப்பட்டார் அங்கே மூன்று நாட்களைச் செலவிட.

கத்தோலிக்க நாடாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஹங்கேரியின் பிரதமரின் வலதுசாரித் தேசியவாதத்திலிருந்து தன்னை விலக்கிக் காட்டவே பாப்பரசர் அங்கே தனது விஜயத்தை குறுக்கிக்கொண்டார் என்று அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பாப்பரசர் ஹங்கேரியில் பிரதமர் விக்டர் ஒர்பானையும், ஜனாதிபதி யானோஸ் ஆடரையும் சந்தித்துப் பேசினார். அதையடுத்து அவர் ஒரு திருப்பலிப் பூசையிலும் பங்குகொண்டார்.

ஹங்கேரியப் பிரதமர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒன்றுபட்டுச் செயற்படாமல் தேசியவாதத்தையும், பழமைவாதத்தையும் தனது நடவடிக்கைகளில் காட்டிவருகிறார். அத்துடன் இனவாதமும், மனித உரிமைகளைக் கட்டுப்படுத்துவதும் அவரது ஆட்சியில் அடையாளங்களாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. 2015 இல் ஐரோப்பாவுக்குள் பெருமளவு அகதிகள் வந்தபோது தனது நாட்டுக்குள் எவரையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று மறுத்து அதையே தொடர்ந்தும் கைக்கொண்டு வருகிறார். 

பாப்பரசர் பிரான்சீஸ் ஹங்கேரியின் மேற்கண்ட நடவடிக்கைகளை விரும்பவில்லை. அவர் பல தடவைகள் ஐரோப்பியா நாட்டின் அரசுகளை “அகதிகளுக்கு உதவுங்கள், பலவீனமானவர்களுக்கு ஆதரவு காட்டுங்கள்,” என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்து வருகிறார். மட்டுமன்றி தேசியவாதம், இனவாதம், பழமைவாதம் போன்றவற்றைப் பகிரங்கமாகக் கண்டித்தும் வருகிறார். 

ஹங்கேரியில் செலவிடும் தனது நேரத்தைக் குறைப்பதன் மூலம் பாப்பரசர் அந்த நாட்டின் அரசியலுக்குத் தனது எதிர்ப்பைக் காட்ட விரும்புகிறார் என்று பலர் கருதுகிறார்கள். 

“கிறீஸ்தவ நாடான ஹங்கேரியைக் கடந்து செல்லாதீர்கள்,” என்று நான் பாப்பரசரிடம் வேண்டிக்கொண்டேன் என்று அவரைச் சந்தித்தபின்னர் விக்டர் ஒர்பான் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் எழுதியிருந்தார்.

சுமார் 75,000 பேர் பங்குபற்றிய திருப்பலி நிகழ்ச்சியில் பங்குகொண்ட பாப்பரசர் ஹங்கேரிய மக்களிடம், “உங்கள் மனத்தைத் திறவுங்கள், பலவீனமானவர்களுக்கு உதவுங்கள்,” என்று கேட்டுக்கொண்டார். அந்தத் திருப்பலிப் பூசையில் விக்டர் ஒர்பான் தனது மனைவியுடன் பங்குகொண்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *