நீதித்துறையும் தனியார் சிறைச்சாலைகளும் ஒப்பந்தம் செய்துகொள்வதைத் தடுத்து ஜோ பைடன் உத்தரவு.
தனது தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட நிற, இன பேதங்களுக்காக குடிமக்களைப் பேதப்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஜோ பைடன் ஈடுபட்டு வருகிறார். அவைகளின் ஒன்று மனிதர்களைச் சிறையிலடைப்பதன் மூலம் இலாபம் சம்பாதிக்கும் வியாபாரத்தை நிறுத்தும் முடிவாகும்.
“நாட்டை நிர்வகிக்கும் முறைகளிலிருக்கும் நிறவாதத்தைக் களைவது எனது முக்கிய குறிக்கோள்,” என்று தனது பதவியேற்பு தினத்தில் குறிப்பிட்டிருந்த ஜோ பைடன் பாராளுமன்றத்தில் “அமெரிக்கா தனது குடிமக்களை நிர்வகிக்கும் அடிப்படைக் கோட்பாடுகளின் அத்திவாரங்களைப் பற்றி வித்தியாசமாகச் சிந்திக்கவேண்டும்,” என்று குறிப்பிட்டார். அதற்காக இதுவரை நிர்வகிக்கப்படும் பல விடயங்களை வேறு விதமாக மாற்றவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
‘அமெரிக்காவின் வெவ்வேறு சிறைச்சாலைகளில் இரண்டு மில்லியனுக்கு அதிகமானவர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களில் விகிதாசார ரீதியின் சிறுபான்மையினரே மிக அதிகம்,’ என்று வெள்ளை மாளிகையின் அறிக்கை குறிப்பிடுகிறது. தனியார் சிறைச்சாலைகளின் இலாபம் சம்பாதிக்கும் நோக்கமும் முடிந்தளவு அதிகமானோரைச் சிறையிலிடக் காரணமாக இருக்கிறதென்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். அத்துடன் நீண்ட காலமாகவே சிறைச்சாலைக்குள் அதிகரித்துக்கொண்டிருக்கும் கைதிகளின் தொகையையும் குறைக்கவேண்டுமென்பது பைடன் அரசின் குறியாகும்.
அமெரிக்காவில் 152,000 அரசாங்கச் சிறைகளும் 14,000 தனியார் சிறைகளும் இருக்கின்றன. அரசின் நீதித்துறை தனியார் சிறைகளுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வதன் மூலம் அச்சிறைகளுக்கான கைதிகள் அனுப்பப்படுகிறார்கள். அந்த ஒப்பந்தங்களை மேற்கோண்டு நிறுத்திவிடவேண்டும் என்பதே பைடன் அரசின் ஆணையாகும்.
வீடுகளை வாடகைக்கு எடுத்தல், தொழில் சந்தை, கல்விக்கூடங்களிலும் கூட நிலவும் கட்டுப்பாடுகளும், சட்டங்களும் வெள்ளையினத்தவர் தவிர்ந்தவர்களுக்கு முட்டுக்கட்டைகளைப் போடுகின்றது என்பது ஆராய்ச்சிகளிலிருந்து தெளிவாகத் தெரியும் உண்மையாகும். எனவே அங்கு நிலவும் கட்டுப்பாடுகள், நடத்தைகளையும் கவனித்து நிற, இன வாதத்துடன் இருப்பின் அவைகள் மீது கவனமெடுக்கும்படியும் பைடன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இவைகள் பற்றி பைடன் பாராளுமன்றத்தில் செவ்வாயன்று பேசியதால் ரிபப்ளிகன் கட்சிக்காரர்கள் சிலர் தமது பெரும் எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறார்கள். “பைடன் அரசு மற்றக் கட்சிக்காரர்களெல்லாரையும், மற்றைய இயக்கங்களையும் நிறவாதிகளாகச் சித்தரிக்க முற்படுகிறது,” என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
அமெரிக்காவின் மனித உரிமை பேணும் அமைப்புக்கள் பைடன் எடுத்திருக்கும், சுட்டிக்காட்டும் நடவடிக்கைகளைப் பாராட்டும் அதே சமயம் பழமைவாதிகள் குறிப்பிடப்படும் நடவடிக்கைகள் தனியார் நிறுவனங்களைப் பாதிக்கும் என்று விமர்சிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்