அமெரிக்காவைத் தாக்கிவரும் பனிக்காலச் சூறாவளி வெப்பநிலை – 45 வரை ஆக்கலாம் என்று எச்சரிக்கை.

சரித்திரத்தில் இதுவரை காணாத மோசமான சூறாவளியொன்று குளிர்கால அமெரிக்காவைத் தாக்கிவருவதாக காலநிலை அவதான நிலையங்கள் எச்சரித்திருக்கின்றன. ஏற்கனவே சுமார் ஒன்றரை மில்லியன் பேருக்கு மின்சார இணைப்பு அற்றுப்போயிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான விமானங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. சில பகுதிகளில் குளிர் – 45 செல்சியஸை அடையலாம் என்று குறிப்பிடப்படுகிறது.

தாக்கிவரும் சூறாவளியின் வகையை bomb cyclone என்று குறிப்பிடுகிறார்கள். அது காற்றழுத்தம் அதிரடி வேகத்தில் குறைவதால் ஏற்படுவதாகும். காற்று அழுத்தம் அதிகமுள்ள பகுதியிலிருந்து அழுத்தம் குறைந்த பகுதியை நோக்கி நகர்கிறது. படு வேகமான காற்று குறிப்பிட்ட பகுதிகளுக்கும் அதீதமான பனியையோ, மழையையோ கொண்டுவரும் இந்தக் காலநிலை உண்டாவது மிகவும் அரிதானது.  

நியூயோர்க் ஆளுனர் தனது பிராந்தியம் முழுவதிலும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறார். மாநிலம் முழுவதிலும் பயங்கரமான பாதிப்புகளை இந்தக் காலநிலை உண்டாக்கலாம் என்று எச்சரித்திருக்கிறார். 

அமெரிக்காவின் மத்திய கிழக்கிலிருந்து கிழக்குக் கடலோரம் வரை, நியூபவுண்ட்லாந்திலிருந்து பெர்முடாவின் தெற்கு எல்லை வரை இந்தக் காலநிலையின் தாக்குதலை அனுபவிக்கும். அமெரிக்காவின் மூன்றிலொரு பகுதி மக்கள் அதாவது 340 மில்லியன் பேர் ஏதாவது வகையில் இந்தக் காலநிலையின் பாதிப்பை உணர்வார்கள் என்று கால நிலை அவதான நிலையங்கள் அறிவித்திருக்கின்றன.  

டெக்ஸாஸ் முதல் மெய்ன் வரை ஒன்றரை மில்லியன் பேர் மின்சாரத் தொடர்பை இழந்திருக்கிறார்கள். நத்தாருக்கு முதல் நாள் சிலருக்கு மீண்டும் மின்சாரத் தொடர்பு கிடைத்திருக்கிறது. 5,000 விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. நத்தார் பண்டிகையை ஒட்டிய காலம் அமெரிக்காவின்  முக்கிய பிரயாணக் காலமானதால் பல்லாயிரக்கணக்கானோர் விமான நிலையங்களில் தங்கவேண்டியதாயிற்று. 

போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால் வீதியில் இறங்குவதைத் தவிர்த்துக்கொள்ளும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். 13 பேர் இறந்திருப்பதாகவும் அத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *