உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப்புக்காக வாதாடவிருந்த இரண்டு வக்கீல்கள் விலகினார்கள்.
ஜனவரி 06 ம் திகதியன்று பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையிலீடுபட்டவர்களைத் தூண்டிவிட்டது டிரம்ப்தான் என்று அவரை நீதியின் முன் நிறுத்த இரண்டே வாரங்களின் முன்னர் அவருக்காக வாதாடவிருந்த இரண்டு வக்கீல்கள் விலகிக்கொண்டார்கள்.
புர்ச் பவர்ஸ், டெபொரா பார்பியர்ஸ் இருவரும் டிரம்ப்பில் தவறில்லை, அவர் அரசியலமைப்புச் சட்டத்துக்கெதிராக நடக்கவில்லை என்று வாதிடுவதற்காகத் தயார் செய்துகொண்டிருந்தார்கள். எவ்விதமாக வாதாடுவது என்று டிரம்ப்புக்கும் வக்கீல்களுக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் அவர்கள் விலகிக்கொண்டதாக அறிவிக்கப்படுகிறது.
அவ்விருவரையும் தவிர மேலும் மூன்று வக்கீல்களும் கூட விலகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின்றன. நடந்த ஜனாதிபதி தேர்தலில் தானே வென்றதாக டிரம்ப் தொடர்ந்தும் குறிப்பிடுவதாகவும் அவ்வாதத்துடன் செயற்பட வக்கீல்கள் விரும்பாததாலேயே அவர்களெல்லோரும் விலகிவிட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
கடைசி நகர்வாக டிரம்ப் புதியதாக இரண்டு வக்கீல்களை நியமித்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. அவர்கள் டிரம்ப் விரும்புவது போல நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மிகப்பெரும் மோசடிகள் நடாத்தப்பட்டு ஜோ பைடன் வென்றார் என்ற கருத்துடன் வாதாடுவார்கள் என்பது பற்றித் தெரியவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்