பத்து வயதில் கடத்தப்பட்டுத் தானே கொடூரமான போர்க் குற்றங்களை மற்றவருக்கு இழைத்தவரை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டார்.
டொமினிக் ஒங்வன் என்ற உகண்டாவைச் சேர்ந்த Lord’s Resistance Army இயக்கத்தினரின் தளபதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பல குற்றங்கள் செய்ததாகத் தண்டிக்கப்பட்டார். அவர் மீது சாட்டப்பட்டிருந்த 70 விதமான குற்றங்களில் 61 மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.
குழந்தைகள் கொலை, கற்பழிப்பு, பாலியல் அடிமைகள், பிள்ளைக்கடத்தல், சித்திரவதைகள் போன்ற கொடூரமான குற்றங்களைத் தனது சொந்த முடிவுடன் செய்திருக்கிறார் கடத்தப்பட்டுக் ஒரு குழந்தைப் போராளியாகப் பாவிக்கப்பட்ட இவர்.
1987 இல் ஆரம்பிக்கப்பட்ட கடவுளின் இராணுவம் என்ற இந்தக் கொடூரமான இயக்கம் உகண்டாவை ஒரு சுத்தமான கிறீஸ்தவ நாடாக்கவேண்டும் என்று கோஷமிட்டுக்கொண்டு போரிட்டது. சுமார் 67,000 பேரை – அதில் 30,000 – பிள்ளைகளைக் கடத்தியிருக்கிறது இந்த அமைப்பு. அவர்களைக் கடத்திச் சென்று சொன்னதைச் செய்யும் போராளிகளாக்குவதும், பாலியல் அடிமைகளாகப் பாவிப்பதும், பிள்ளைகளைப் பெறும் இயந்திரங்களாகப் பாவிப்பதும், சித்திரவதை செய்வதும் போன்ற மிருகத்தனமான காரியங்களில் இவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
2002 – 2005 வரையிலான காலப்பகுதியில் ஒங்வான் உகண்டாவின் வடக்குப் பகுதியில் சாதாரண மக்கள் மீது திட்டமிட்டுப் பல குற்றங்களைச் செய்ததாகக் குறிப்பிடுகிறது வழக்கு. கர்ப்பிணிப் பெண்களை வெட்டிக் கொன்று, சிலரை தீயில் போட்டு எரித்து, கைக்குழந்தைகளுடன் இருக்கும் பெண்களைக் கடத்தும்போது குழந்தைகள் அழுவதால் அவர்களுடைய பிள்ளைகளைப் புதர்களுக்குள் தூக்கியெறிந்திருக்கிறார்கள். இப்படியான குற்றங்கள் ஒங்வானின் தலைமையில் நடந்திருக்கின்றன என்பது பல சாட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
ஒங்வான் மோசமான குற்றங்களால் மன நிலை பாதிக்கப்பட்டே கொடூரமான குற்றங்களைச் செய்தார் என்று நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தான் பாதிக்கப்பட்ட விதத்தால் மட்டுமன்றி மேலும் கோரமான குற்றங்களை ஒரு வளர்ந்த மனிதராகத் தெரிந்தே செய்திருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
ஒங்வானுக்கான தண்டனை பற்றி ஏப்ரல் மாதத்தில் நீதிமன்றம் கூடும். 30 வருடத் தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடவுளால் கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளை நிறைவேற்றும் நாட்டை ஸ்தாபிக்க வந்த இரட்சகராகத் தன்னைக் குறிப்பிட்ட ஜோசப் கொனி என்பவரால் கடவுளின் இராணுவம் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவின் பழமைவாதக் கிறீஸ்தவ அமைப்புகளிலிருந்து இந்த அமைப்புக்கு உதவிகள் கிடைத்தன. அத்துடன் உகண்டா மற்றும் பக்கத்து நாடுகளின் இயற்கை வழங்களையும் அவர்கள் சுரண்டினார்கள். சுமார் கால் நூற்றாண்டாகத் தனது மிலேச்சத்தனத்தைக் காட்டிக்கொண்டிருந்த ஜோசப் கொனி தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்