அமெரிக்காவின் சர்வதேச அரசியல் நிலைப்பாடு பற்றிய தன் வழியைப் பற்றிய ஜோ பைடனின் முதலாவது அறிவிப்பு.
“அமெரிக்கா மீண்டும் வெளிநாட்டு அரசியலில் இணைந்து செயற்படும், அமெரிக்காவின் நட்பு நாடுகளுடனான இராஜதந்திரத் தொடர்புகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும், சர்வாதிகார அரசியல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்,” என்று ஜோ பைடன் குறிப்பிட்டார்.
மியான்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் வீழ்த்தியதையும், ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்செய் நவால்னிய் கைதுசெய்யப்பட்டதையும், சீனாவில் சிறுபான்மையினருக்கெதிராக நடாத்தப்படும் மனித உரிமை மீறல்களையும் கண்டித்த ஜோ பைடன், அதுபோன்ற விடயங்களில் அமெரிக்கா சர்வதேசத்துடன் சேர்ந்து ஜனநாயகம் வளர்வதற்காக உதவும் என்று குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரை ஜோ பைடன் குறிப்பாக யேமனில் சவூதி அரேபியா நடாத்திவரும் கொடூரமான போருக்குத் தொடர்ந்தும் அமெரிக்கா துணைபோகாது என்று குறிப்பிட்டார். அத்துடன் யேமனில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்காக தனியாக ஒரு அமெரிக்கத் தூதர் அமர்த்தப்படுவார் என்றும் குறிப்பிட்டார்.
சர்வதேச ரீதியில் LGBTQ இனரின் உரிமைகளைப் பாதுகாப்பதைப் பற்றிய ஒரு கோட்பாட்டு அறிக்கையை ஜோ பைடன் வெளியிட்டார். “உலகில் சகல மனிதர்களையும் சரிசமனாக மதிக்கவேண்டும். ஒரு மனிதர் யாரை விரும்புகிறார், அவருடைய பாலுணர்வு விருப்பம் எது போன்ற விடயங்களைக் கவனித்து ஒருவரை மதிப்பது சரியல்லல,” என்று அவர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்