“சிறீலங்காவின் உயர்மட்டத் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகள் போடுங்கள்!” மிஷல் பஷலெட்.
விடுதலைப் புலிகளுடனான கடைசிக் கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி சிறீலங்காவின் அரசினால் அச்சமயத்தில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஐ.நா-வின் மனித உரிமை பேணும் குழுவின் பொறுப்பாளரான மிஷல் பஷ்லெட் அதற்காக நடவடிக்கைகள் எடுக்கும்படி கோரியிருக்கிறார்.
‘தயவு தாட்சண்யமின்றி கடைசிப் போரில் பல்லாயிரக்கணக்கானோரைச் சிறீலங்கா இராணுவம் கொன்றதையும், போரில் விடுதலைப் புலிகள் இழைத்த போர்க் குற்றங்களையும் விசாரிக்க சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஒரு குழுவை நியமிக்கவேண்டும்,’ என்று கோரியிருக்கும் பஷலெட் ராஜபக்சே சகோதரர்கள் நடுநிலையான ஒரு விசாரணையை நடத்துவதற்கு இதுவரை சகலவிதமான இடைஞ்சல்களையும் போட்டு வந்திருக்கிறார்கள் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
2011 இல் ஐ.நா நடத்திய விசாரணைகளில் கடைசிக் கட்டப் போரில் அரச இராணுவம் நாட்டின் மருத்துவசாலைகள் மீது நடாத்திய தாக்குதல்கள், கைப்பற்றப்பட்ட போராளிகள் மீது நடாத்தப்பட்ட பலாத்காரம், வன்முறை, கற்பழிப்புக்கள் பற்றிக் குறிப்பிட்டுக் கடுமையாக விமர்சித்து அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அச்சயம ஜனாதிபதியாகவும், இராணுவத்தின் உயர்தளபதியாகவுமிருந்தவர்கள் ராஜபக்சே சகோதர்களே. அந்தச் சமயத்தில் விடுதலைப் புலிகளும் போர்க்காலக் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
கடைசிக் கட்டப் போரில் இராணுவத் தளபதிகளாக இருந்து போர்க்காலக் குற்றங்களுக்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்ட இருவரில் ஒருவர் சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சராகவும், மற்றொருவர் இராணுவத்தின் உயர் தளபதியாகவும் நியமிக்கப்பட்டதையும் பஷலெட் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் பதவிக்கு வந்தவுடன் முன்னர் நடாத்தப்பட ஆரம்பித்திருந்த பல போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகளையும் கூட இடையில் நுழைந்து தடுத்து வருகிறார்களென்றும் அறிக்கையில் பஷலெட் குறிப்பிட்டிருக்கிறார். நாட்டின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை உண்டாக்குவதற்கும், சிறுபான்மையினருக்கு அரசியல் மீது நம்பிக்கை உண்டாக்குவதற்கும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டவும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஒரு நடுநிலையான குழுவின் தலைமையிலான ஆராய்ச்சியை நடாத்துவது அவசியமென்கிறார் அவர்.
சாள்ஸ் ஜெ. போமன்